பக்கம்:வாடா மல்லி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 29


சுயம்பு, திடீரென்று அக்காவிடமிருந்து விடுபட்டு, கட்டிலில் இருந்து அப்படியே விழுந்தான். தரையில் அங்குமிங்குமாய் புரண்டான். மோவாயைத் தூக்கி தூக்கி தரையில் இடித்தான். “அய்யோ. அய்யோ...” என்று கை கால்களைச் சுருக்கினான், நீட்டினான், மடக்கினான்.

மரகதம், இப்போது தானே பிரமை தட்டி நின்றாள். தம்பியின் படிப்பு நின்றுபோய்விடும் என்று நினைக்கக் கூட அவளால் முடியவில்லை. எப்படியோ சுதாரித்துக் கொண்டு அவன் அருகே மண்டியிட்டு உட்கார்ந்தபடியே “தம்பி... தம்பி...” என்றபோது..

வெள்ளையம்மா, உள்ளே வந்தாள். “அய்யோ.. இங்க வந்து பாருங்களேன்” என்று சத்தம் போடப்போன அம்மாவின் வாயை மரகதம் கைகளால் பொத்தினாள். அப்போதும், அவள் பேசினாள். இதனால் தாய்க்காரியிடமிருந்து விதவிதமான-விநோதமான சத்தம் ஏற்பட்டது. எப்படியோ, மகளிடமிருந்து விடுபட்டும் விடுவித்துக் கொண்டும், மகள் மெல்லப் பேசு என்று சைகை செய்த கையைத் தட்டிவிட்டபடியே அதற்கு எதிர்மாறான குரலில் பேசித் தீர்த்தாள்.

‘ஒப்பன் புத்திதான ஒனக்கு இருக்கும்.. எதுக்காக மெள்ளப் பேசணும்னே. இது ஊரு முழுக்க தெரிய வேண்டிய விஷயம். எல்லாம் அந்த எரவாளி பய மகள் சீதாலட்சுமியோட வேல. இவங்கிட்டயும் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன். உச்சி காலத்துல அவள் சமாதிப் பக்கம் போகாதடா போகாதடான்னேன். பாவிப் பய கேக்காம இப்ப வட்டியும் முதலுமா வாங்கிட்டு வந்துட்டான்.”

“அந்தப் பாவப்பட்ட அக்காவை. ஏம்மா வம்புக்கு இழுக்கே... பாவிமகள் சொல்லாம கொள்ளாம துள்ளத் துடிக்க செத்தவள்...”

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/51&oldid=1249192" இலிருந்து மீள்விக்கப்பட்டது