பக்கம்:வாடா மல்லி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 35


இந்தச் சமயத்தில் கோமளம் குறுக்கிட்டாள். முப்பது வயதுக்காரி, பெங்களூர் கத்திரிக்காய் மாதிரி சிறிது கரடு முரடான முகம். ஆனாலும், தென்னை இளமட்டை போன்ற அந்த நிறமும், அந்த லாவகமும், அவளுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்தன. இப்போது வருங்காலத் தங்கையின் கணவன் என்ற உரிமையோடு, அவள் சுயம்புவை அதட்டினாள்:

“இவ்வளவு பணம் போட்டு உன்னை எதுக்காக படிக்க வைக்கோம்! இந்த மூணு மாதத்துல, ஹாஸ்டலுக்கே மாதா மாதம் எழுநூறு ரூபா ஆகியிருக்கு. புத்தகம், பீஸுன்னு தனியா மூவாயிரம். ஒங்கப்பா, வீட்ல இருக்க வேண்டிய இந்த வயசுல, காட்ல கிடக்கார். ஒங்க அண்ணன் காலையில வயலுக்குப் போயிட்டு ராத்திரிக்குத் தான் வாறவரு. இந்த ஊர. இன்னிக்குத்தான் பகலுல பாக்காரு. அதுவும். நீ வில்லடிக்கிறதால. நாங்க படுற பாட்டை நினைச்சுப் பார்த்தால், உனக்கு எப்படி படிக்க மனசு இல்லாமப் போகும்?”

எங்கேயும் தோன்றும், மாமியார்-மருமகள் மகா யுத்தம் அங்கேயும் தோன்றியது. வெள்ளையம்மா, மகன் மூலம் எச்சரித்த ள்.

“அவனே சித்தம் கலங்கி நிக்கான். இதுக்குமேல பேசக் கூடாதுன்னு சொல்லுடா...”

ஆறுமுகப்பாண்டிக்கு, தாயே பேசச் சொல்லிக் கொடுத்தது போலிருந்தது.

“எதுக்கும்மா சொல்லனும்? முழுத்த ஆம்பளைப் பயல். ஒடுற பாம்பை பிடிக்கிற வயசு. காலேஜுக்குப் போகமாட்டேன், பயமா இருக்குன்னு சொன்னால், அவள் கேட்கக்கூடாதா? முட்டையிடுற கோழிக்குத்தான் பிட்டி வலிக்கும். ஒன் மருமகள் நகையை அடகு வைச்சுத்தான் காலேஜுக்கு பணம் கட்டுனோம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/57&oldid=1249189" இலிருந்து மீள்விக்கப்பட்டது