பக்கம்:வாடா மல்லி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 39


எப்படிச் சொல்ல முடியும்? ‘எக்கா... எக்கா. உன் மாப்பிள்ளை ஊருக்குப் போய் பையனைப் பார்த்துட்டுத் தான் இனிமேல், ஊருக்கு வருவேன். உனக்கு வாக்குக் கொடுத்ததை மறக்கலக்கா. எனக்குப் பிடிக்காட்டா இந்தக் கலியாணத்தை நடத்த விடமாட்டேங்கா” என்று தம்பி மீண்டும் சொல்லிவிட்டுப் போனதை எப்படிச் சொல்ல முடியும்? ஆனாலும் அவள், சத்தம் போட்டுத் தொலைவில் போன தம்பியைத் திரும்ப வைத்துப் பேசினாள்.

“அதுக்காக சீக்கிரமா ஊருக்கு வந்திடாதே... வேணுமுன்னா லெட்டர் போடு.”

சுயம்பு, அக்காவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே, தன் பாட்டுக்கு நடந்தான். அந்தப் பொது வழியில் நடந்தாலும், தான் மட்டுமே தனியாய் நடப்பது போல் நடந்தான். உடம்பைச் சுருட்டிச் சுருட்டி, சுருண்டு சுருண்டு நடந்தான். குழாயடிப் பக்கம் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கிசுகிசு பேசினார்கள். “என்ன வந்திட்டு இவனுக்கு? நம்மையே பார்த்துட்டு நிக்கான் பாரு? புட்டத்தை ஏன் இப்படி அசைச்சு அசைச்சு நடக்கான்? கையக் கால ஏன் டான்ஸ் ஆடுற மாதிரி கொண்டு போறான்? இதோ பாருடி, இந்த மலர்க்கொடிய காணல. அநேகமா இப்போ தோட்டத்துப் பக்கத்துல நிப்பாள்.”

அந்தக் குழாயடிப் பெண்களை ஒன்றிப் போய் பார்த்த சுயம்பு, மீண்டும் தன்னைத்தானே தூக்கிக் கொண்டு போவதுபோல் நடந்தான். அக்கம் பக்கத்துத் தேனிர்க் கடைக்காரர்களையோ, அவர்கள் குசலம் விசாரிப் பதையோ காதில் வாங்காமலே, பலியாடு போல, தன்னை யாரோ இழுத்துக்கொண்டு போவதுபோல் கழுத்தை நீட்டி நீட்டிப் போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/61&oldid=1249196" இலிருந்து மீள்விக்கப்பட்டது