பக்கம்:வாடா மல்லி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 41


“மாமா, மாமா.. எனக்கு காலேஜ் போகப் பிடிக்கல மாமா. வீட்டுல துரத்துறாங்க மாமா. ஒங்ககிட்டயே என்னை வேலைக்காரனா சேர்த்துக்குங்க மாமா...”

வீரபாண்டி, அதிர்ந்துபோனான். இப்போதுதான் அவனை முழுமையாக உற்றுப் பார்த்தான். படர்ந்த மார்பும், விரிந்த முகமும், அதற்கேற்ற கால் கைகளும் கொண்ட சுயம்பு, மெள்ள மெல்ள வேற்று ஆளாக மாறிக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஒடுங்கிப் போய் நின்றவனின் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, வீரபாண்டி கண்ணை மூடினான். கல்வியால் கிடைக்கின்ற பம்மாத்தையும் ஊழல் பணத்தையும், அதனால் சுயம்பு விற்குச் சொந்தமாகப் போகும், காரையும் பங்களாவையும் கண்காட்சி வர்ணனைபோல் சொல்லிக்கொண்டிருந்தான். கண்ணைத் திறந்தால், அங்கே சுயம்பு இல்லை.

சுயம்பு, அந்தச் சின்னப் பூந்தோட்டத்திற்கு அருகே வந்துவிட்டான். பம்ப்செட் தண்ணிர் கீழே இருந்து மேலே குதித்துப் பாயும் காரைச் சுவர் வாய்க்காலில் கால் பதித்த படியே, மலர்க்கொடி பூத்தொடுப்பதைக் கண்டான். அங்கிருந்து காற்று கொண்டுவந்த பூ வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. மலர்க்கொடி கால்வாய் நீரைக் காலால் எற்றி எற்றி அடித்தபடியே வாழை நாரில் பூத் தொடுத்தாள். அவன் கண்ணில் படும்படியாய் அந்த மாலையைத் துாக்கிக் காட்டினாள். அவன் வருவான் என்று முன்குவிந்தும், வரமாட்டான் என்று பின் வளைந்தும் அல்லாடிக் கொண்டிருந்தாள்.

சுயம்பு, அவளை நோக்கி அக்கம் பக்கம் பார்க்காம லேயே, சர்வ சாதாரணமாக நடந்து வந்தான். அந்த நடைக்குப் பயந்து, அவள் மறையப் போனாள். ஆனாலும் கால்கள் நகரவில்லை. கண்களோ, அவனைக் கூப்பிடப் போவதுபோல் குவிந்தன. சுயம்பு அவளுக்கு நெருக்கமாக நின்றுகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/63&oldid=1249199" இலிருந்து மீள்விக்கப்பட்டது