பக்கம்:வாடா மல்லி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 47


குரல்களும், ஏக்கத்தைக் கொடுக்கும் பாடல்களும், அவனை எதுவும் செய்யவில்லை. சுயம்பு மூலையில் கிடந்த கோரைப் பாயைக் காலால் தட்டி வீழ்த்தினான். அதன் ஒரு முனையில் காலை மிதித்துக்கொண்டு, மறு காலால் அதைப் பிரித்துவிட்டான். அப்படியே குப்புறச் சாய்ந்தான். கால்களைப் பின்பக்கமாக மடித்து வைத்துக் கொண்டான். தரையைத் தோண்டி முகத்தைப் புதைக்க நினைக்கும் ஆவேசம். தன்னையே வெறுக்கும் கண்மூடல். பிறகு, கால்களை மேலே தூக்கியும், கீழே போட்டும் வெறுந் தரையில் நீச்சலடித்தான். அவன் பிடறியில் கட்டிய பூவை அமைதியான அழுத்தத்துடன் பார்த்த அந்த அறைத்தோழர்களான பணக்கார மூர்த்தியும் கடன்கார முத்துவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு, தங்களுக்கு இடையே நின்ற சினிமா நடிகையை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் பேசத் துவங்கினார்கள். திடீரென்று மூர்த்திக்கு, பேராசிரியர் லிங்கையா வகுப்பை வாதை செய்த ‘ஓம்ஸ் விதி நினைவுக்கு வந்தது. விஞ்ஞான விதியாக அல்ல, தலைவிதியாக நாளைக்குக் கேள்வி கேட்பார். பதிலளிக்க முடியவில்லையானால், அவருக்குக் கோபம் வரும். அவர் கோபத்தைப் பற்றி எவன் கவலைப்பட்டான்? ஆனால், பெண் கிளாஸ்மேட்கள் இளக்காரமாய்ச் சிரிப்பார்கள். தங்களுக்கு விடை தெரியும் என்பதுபோல், கைகளை மேலே தூக்கிக் காட்டுவார்கள். இவர்கள் வெளியே தேவதைகள், வகுப்புக்களில் சேடிஸ்ட் ராட்சசிகள்.

மூர்த்தி குழைந்தபடியே முத்துவிடம் கேட்டான்:

“பேராசிரியர் லிங்கையா அறுத்தாரே, ஓம்ஸ் லா. அப்படின்னா என்னடா ?”

“ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கினே இல்ல. நமக்கும் கொஞ்சம் மால் வெட்டு. பதில் உடனே கிடைக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/69&oldid=1249208" இலிருந்து மீள்விக்கப்பட்டது