பக்கம்:வாடா மல்லி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 75


ஒத்தாசை செய்யாட்டாக்கூட எப்படி?... ஆனாலும், ஒன்னோட அவன் நல்ல ஆம்புளையாத் தெரியலை.”

“அப்புறம் பேசிக்கலாம். அதோ வாரானே. அவன் தான் எங்கண்ணன். ஒங்க மச்சான்.”

சுயம்பு, மைத்துனனோடும், தம்பியோடும் மத்தியில் வந்தவனைப் பார்த்தான். பயந்தது போல் இல்லை. சரியான உயரம். இரும்பால் செதுக்கப்பட்டது போன்ற உடம்பு, வயிறே தெரியாத வாளிப்பு. எல்லா அவயங்களும் தனித்துவ அழகோடும், ஒட்டு மொத்தமான அழகோடும் ‘இருவேறு விதமாய்த் தோன்றினான். கருஞ்சிவப்பு. மூக்குதான் கருடன் மாதிரி. பரவாயில்லை. திருஷ்டி மாதிரி இருந்துட்டுப் போகட்டும். சுயம்புவின் வருங்கால மைத்துனன் அவனைப் பார்த்துச் சிரித்தான். அவன் தோளில் கை போட்டபடியே உள்ளே கூட்டிப் போனான். அம்மா விரித்துப் போட்ட பாயில் உட்கார்ந்தார்கள். கல்லூரிக்காரி, அவனுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கேட்டாள்.

“நீங்க எந்த காலேஜ்?” அவன் பெயரைச் சொன்னான்.

“நானும் அங்கேதான் படிக்கேன். மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் இரண்டாவது வருஷம்.”

“நான் எலெக்ட்ரானிக் முதல் வருஷம். உங்களைப் பார்க்கவே இல்லையே?”

அம்மாக்காரி, பிள்ளைத்தாய்ச்சி மகளின் தலையை வருடிக் கொடுத்தபடி, சின்ன மகளின் பெருமையை, பெருமை பிடிபடாமல் சொன்னாள்.

“எங்க இந்திரா இருக்கிற எடமே தெரியாது. அவ்வளவு அடக்கம். நீங்க நெனெச்சிக்கூடப் பார்க்க முடியாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/97&oldid=1249238" இலிருந்து மீள்விக்கப்பட்டது