பக்கம்:வாழும் வழி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

21


என்னும் புறநானூற்றுப் (151) பாடல் புலனாக்கும். கணவர் இல்லா நேரத்தும் பெண்கள் விருந்தோம்பியதால் உண்டான பெருமை அவர் குடும்பத்திற்கு மட்டுமா நாட்டிற்கும் உரியதாயிற்றன்றோ? அதனால் அன்றோ, இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னரும், நாம் அவர்களைப் பற்றி நினைக்க முடிகிறது. விருந்தோம்பலின் சிறப்புத்தான் என்னே!

ஒளவையார் ஏமாற்றம்

விருந்தோம்புதலின் பெருமையறியாத பேதையர் சிலர், விருந்தினரைக் கண்டதும் ஓடிப் பதுங்குகின்றனர். சில வீடுகளில் கணவன் விருந்தினரை அழைத்துக் கொண்டு உள்ளேநுழைய முடியாது. தவறி நுழைந்தாலோ புடவை கட்டிய புலி பாயும். பாவையெனப் பெயர்பெற்ற பாம்பு சீறும். இந்நிலையில், விருந்தினரைக் கண்டால் தலைமறைவாய்ப் போகாமல் வேறென்ன செய்வான் கணவன். விருந்தினரை அழைத்து வந்தால், மனைவி கணவன் தலையில் சட்டியையிட்டு உடைக்க, அது வளையம்போல் கழுத்தை அலங்கரித்த கதையை, “வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு என் தலையில், இந்தப் பூணாரம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை” என்னும் அடிகள் அறிவிக்கப்படவில்லையா?

ஒரு சமயம், ஒரு வீட்டின் வெளித் திண்ணையில் விருந்தாக அமர்ந்திருந்தார் ஒளவையார். அவரை எப்படியாவது உண்ணச் செய்யவேண்டும் என்பது அவ்வீட்டு ஆடவனின் ஆவல். அவன் மனைவியோ கொடுமைக்கு இருப்பிடம். விருந்து வந்துள்ளதென அவளிடம் விளம்பவும் அச்சம். ஆதலின், அவளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/23&oldid=1104127" இலிருந்து மீள்விக்கப்பட்டது