பக்கம்:வாழும் வழி.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வாழும் வழி


கடைக்குச் சென்று அரிசி வாங்கி வரப்போகிறோம்? இது இரண்டாவது படி. உங்களுக்காகவா விதைத்துப் பயிரிடப் போகிறோம்? இது மூன்றாவது படி. இந்த மூன்றாவதுபடியே இக்குறளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டது. இந்தக் கருத்தினை அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.

‘இரட்டுற மொழிதல்’ (இரு பொருள்படக் கூறுதல்) என்றும் ஓர் இலக்கணக் கொள்கைப்படி, இன்னொரு கோணத்தில் நின்றும் இந்தக் குறளை நோக்கலாம். அஃது என்ன?

“தன்னலம் பாராது பிறர்நலமே பேணுபவன் - தன் பசியையும் பாராது பிறர் பசியைப் போக்குபவன் - தனக்கு வைத்திருந்த உணவைப் பிறர்க்கு அளித்துவிடும் பெரிய உள்ளம் படைத்தவன், வீட்டில் ஒன்றும் இல்லாத போது விருந்தினர் வந்துவிட்டால், விதைப்பதற்கென்று வைத்திருக்கும் விதை நெல்லை நிலத்தில் கொண்டு போய் விதைக்கவும் விரும்புவானா? விரும்பமாட்டான். அதனைக் குத்தி அரிசியாக்கிச் சமைத்து விருந்தினர்க்குப் படைக்கவே செய்வான்” - என்ற கருத்து பொதிந்த கண்களுடன் இந்தக் குறளை நோக்குங்கள்! விதைத்த நெல்லையே நிலத்திலிருந்து எப்படியோ எடுத்துக் கொண்டு வந்து குத்திச் சமைத்து வந்தவர்க்கு இட்ட வள்ளல் இளையான்குடி மாற நாயனாரது வரலாறு தமிழ் மக்கள் அறியாததொன்றன்று.

இந்தக்கருத்தின்படி, இக்குறளிலுள்ள ‘வேண்டும்’ என்னும் சொல்லுக்கு ‘விரும்புதல்’ என்று பொருளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/64&oldid=1107043" இலிருந்து மீள்விக்கப்பட்டது