பக்கம்:வாழும் வழி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

97



மன்றல் நாள் வந்தது. மணவீட்டை நெருங்கினேன் நான். மங்கல இன்னியங்கள் முழங்கின. ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப, வாழை, தோரணம் முதலிய மங்கலப் பொருட்களுடன் பொலிவுற்றுத் திகழ்ந்த வாயிலையடைந்தேன். அவ்வீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தேன். ஒன்றன் மேல் ஒன்றாய் இரண்டடுக்குக் கட்டிடம் நிமிர்ந்து நின்றது. அந்தக் காட்சியைக் கூர்ந்து நோக்கிய எனக்கு, அன்று அப்பெரியார் குறிப்பிட்ட குடிசை நினைவிற்கு வந்தது. அக்குடிசை வேறோரிடத்தில் இருக்கலாமென்றும் இம்மாடி வீடு திருமணத்திற்காகப் பெற்ற இரவல் வீடாயிருக்கலா மென்றும் எனக்குள் தீர்மானித்தேன். ஆயினும் அருகில் நின்ற ஒருவரையணுகி, ‘இது யாருடைய வீடு’ என்று கேட்டேன். உடனே பின் புறத்திலிருந்து, ‘ஏன் ஏமாந்துவிட்டீர்களா?’ என்ற குரல் எழுந்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்தாம் - அந்த வீட்டுக்காரர் - புதுவை வந்து என்னை அழைத்து வந்தவர். தம் மாடி வீட்டைக் ‘குடிசை’ என்று தன்னடக்கமாக என்னிடம் அன்று தெரிவித்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புலப்பட்டது. அன்றைக்கே இதை யான் உணர்ந்து கொண்டிருக்கவுலாம். ஆனால் அவரது அடக்கமான தோற்றம் அவர் வீடு குடிசையாகத்தான் இருக்கும் என்பதை மெய்ப்பித்ததுபோல் தோன்றியது. மேலும், யான் இது போன்றெல்லாம் பேசிப் பழகியதில்லை. பட்டறிவு (அனுபவம்) பெருகப் பெருகத் தானே உலகின் உண்மை யுருவத்தை உணர முடியும்?

திருமண நிகழ்ச்சியும் தொடங்கப்பெற்றது. மன்றல் வினைச் சொற்பொழிவை ஆரம்பபித்த யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/99&oldid=1109619" இலிருந்து மீள்விக்கப்பட்டது