பக்கம்:வாழையடி வாழை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12.சந்தக் கவிமணி தமிழழகர்


"தமிழ், இலக்கியச் செல்வம் மிகுந்த மொழி. தமிழ் மக்கள் நெடுங்காலமாகவே கவிதைச் செல்வத்தை நுகர்ந்து மகிழ்ந்தவர்கள். இத்தகைய கலைச்செல்வத்தை இன்னும் கலைஞர் சிலர் தமிழர்க்குப் படைத்து அளித்த வண்ணம் உள்ளனர். அவர்களுள் 'திரு. தமிழழகன்' ஒருவர். திரு. தமிழழகருடைய கவிதைகள் பலராலும் பாராட்டப்பட்டவை. பல இதழ்கள் வாயிலாக இவருடைய கவிதைகள் கற்பவரின் உள்ளங்களோடு உறவு கொண்டுள்ளன" என்று கவிஞர் கவிதை குறித்து 'டாக்டர் மு. வ. அவர்கள்' தமிழழகன் கவிதைகள் என்னும் நூலிற்குத் தாம் வழங்கிய முன்னுரையில் எழுதியுள்ளார்கள்.

'கவிஞன்' என்ற கவிதையில்,

'காலம் அனைத்தும் கடந்துவந்தேன்;-ஒரு
       கானகப் புள்ளென ஓடிவந்தேன்! கோலக் கவிதைகள் பாடவந்தேன்;-இன்பம்
       கொப்பளிக் கும்நிலை சொல்லவந்தேன்!'

என்று கூறும் கவிஞர்,

      'சந்தனத் தென்மலை
      வந்தாடும் தென்றலில்
சந்தக் கவிதொடுப்போம்:-அதன்
சிந்துச் சுவைமடுப்போம்!'

என்றபடி, சந்ததமும் சந்தம் விரவிவரப் பாடல் புனைவதில் வல்லவராயுள்ளார் என்பது, இவர்தம் பாடல்கள் பலவற்றில் சந்த இன்பம் துலங்குவது கொண்டு அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/169&oldid=1338007" இலிருந்து மீள்விக்கப்பட்டது