பக்கம்:வாழையடி வாழை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

‘வாழையடி வாழை’

கவிஞன் உள்ளத்தில் உண்மையைக் கூறும் ஆர்வம் இருக்க வேண்டும். அவன் உள்ளத்தில் கற்பனையும் உண்மையும் ஒளிவிட வேண்டும். அப்பொழுதுதான் சிறந்த கவிதைகளைப் படைக்க இயலும். இதனைப் பாரதியார் நன்கு தெளிவுறுத்துகின்றார் .


'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்?'

தமிழ்:4


கவிச்சக்கரவர்த்தியாராகிய கம்பர், கவிதையைக் கோதாவிரி ஆற்றின் நீரோட்டத்திற்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்:

'புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற் றாகி'
அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றாேர்
கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்’

கம்பர், கிட்கிந்தா: சூர்ப்ப: 1


தமிழ்க் கவிதைகளுக்கு இருக்கவேண்டிய இயல்புகளை மேற்கூறிய கம்ப நாடரின் கவிதை தெற்றெனப் புலப்படுத்துகின்றது. "பலவகைத் தாதுக்கள் சேர்ந்த உடலுக்கு உயிர் போன்று, பல சொற்களால் பொருளுக்கு இடனாக, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடைகளாலும் அணிகளாலும் நிரம்பப் பெற்றுக் கவிவல்ல புலவனால் பாடப்படுவது கவிதை” என்று தமிழ் நூலார் கூறுவர். ஆனால், மிகவும் எளிய சொற்களைக் கொண்டு அரிய முறையில் கவிதைக்கு விளக்கம் தருகிறார், நம் கவிமணி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/20&oldid=1461210" இலிருந்து மீள்விக்கப்பட்டது