பக்கம்:வாழையடி வாழை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

‘வாழையடி வாழை’


என்ற அழகான தொடரினை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார் கவிஞர்.

காதலின் ஆற்றலைப் படிக்கும் நம் மனத்திற் பசு மரத்தாணியெனப் பதியும் வண்ணம் பாரதியார் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். காதலினால் அறிவெய்தும் என்றும், காதல் கவிதைப் பயிரை வளர்க்கும் என்றும், காதலினால் உயிர் வீரத்திலேறும் என்றும் கவினுற விளக்கும் கவிஞர், காதலின் புகழினை,

'காதலினால் மானிடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானிடர்க்குக் கவலை தீரும்:
காதலினால் மானிடர்க்குக் கவிதை உண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’

என்று காதற்பேரரசின் வலிமையினைப் புலப்படுத்துகின்றார்.

நல்ல காதல் புரியும் அரமபையர் போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’ என்று கூறிய பாரதியார்,

‘--------- கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனொடு இன்னமுதைத் தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்’

குயிற்பாட்டு: 242_246


என்று பெண்ணின் அழகுப் பொலிவினைப் பாடுகின்றார். அடுத்து, 'பெண்ணென்று சொல்லிவிடில் ஒரு பேயும் இரங்கும்’ என்று பெண்ணின் மேன்மை கூறி, அதே நேரத்தில் புதுமைப் பெண்ணையும் படைத்துக் காட்டுகின்றார் பாரதியார். 'ஞானம், நல்லறம், வீர சுதந்திரம் முதலியன நற்குடிப் பெண் பேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/46&oldid=1461235" இலிருந்து மீள்விக்கப்பட்டது