பக்கம்:வாழையடி வாழை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

‘வாழையடி வாழை’


இயற்கை, காதல், பெண்கள், சமூகம், நாடு, மக்கள், மொழி, இனம், தொழிலாளர் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் அவர் சிந்தனை, படர்ந்தது. அவ்வெண்ணத்தின் விளைவாகக் கவிதைப் பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் நித்த நித்தம் பூத்துக் குலுங்கின.

"எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்” என்று தமிழ்ப் பெரியார் 'திரு. வி. க' அவர்களும், "பாரதிதாசன் கவிதையில் வேகம் உண்டு; :விடுதலைத்தாகம் உண்டு; பண்பும் உண்டு; பயனும் உண்டு" என்று பேராசிரியர் 'ரா. பி. சேதுப்பிள்ளை’ அவர்களும், "பாரதியார் சொல்லும் வீரத்தமிழ்ச் சொல் இன்பத்தைப் பாரதிதாசன் பாடல்களில் காணலாம்”, என்று பாரதியாருடன் பழகிய பெரியார் 'பரலி. சு. நெல்லையப்பரும்’, 'அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர் பாரதிதாசன்' என்று புதுமைப் பித்தனும், “பாரதிதாசனின் தமிழ்ப்பற்றுக்கு எல்லையில்லை; அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்," என்று டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் அவர்களும், "பாரதிதாசனாருடன் பழகுவதன்மூலம் 'பாரதியைப் பார்க்க வில்லையே! அவருடன் பழகவில்லையே! என்ற குறை எனக்கு நிவர்த்தியாயிற்று” என்று, 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி' அவர்களும், பாரதிதாசனாரைப் பற்றியும் அவர் தம் கவிதை நலன் குறித்தும் கருத்துரை வழங்கியுள்ளார்கள்.

'விடுதலை எல்லாம் கிளர்ச்சியால் வெல்லும்
விடுதலை வேட்கை வெறிகொண்ட வீரன்’

என்று நாமக்கல் கவிஞர் 'வெ. இராமலிங்கம் பிள்ளை’ அவர்கள் கவிஞர் அவர்களைப் பாராட்டியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/68&oldid=1461245" இலிருந்து மீள்விக்கப்பட்டது