பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

聯 - பதிப்புரை ஒரு காலகட்டத்தின் வரலாறு இதோ உங்கள் கரங்களில் ஆம். பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்களுடைய தன்வரலாற்றை அப்படித்தான் சொல்லமுடியும்; சொல்லவேண்டும். எண்பதைக் கடந்து இன்றும் நம்மோடு வாழ்ந்து வருபவரும்தம்முடைய வாழும் முறையாலும் பண்புகளாலும் நமக்கெல்லாம் மெளன வழிகாட்டியாக விளங்குபவருமான பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்களுடைய தன்வரலாறு ஒர் அரிய வரலாற்று ஆவணமாகும். நாற்பதுகள் தொடங்கி இன்று வரையிலுமான அறுபது ஆண்டுகள் என்னும் நெடிய காலப் பரப்பின் - ஒரு கால கட்டத்து வரலாற்று நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும் தமக்கென்று ஓர் இலட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அந்த இலட்சியத்தை நோக்கி நடந்தபோது, தாம் சந்திக்க நேர்ந்த தனிமனித அனுபவங்களின் தொகுப்பாகவும் அந்த அனுபவங்களில் இருந்து தாம்பெற்ற தெளிவின் பிழிவாகவும் விளங்கும் வல்லிக்கண்ணன் அவர்களுடைய இந்தத் தன்வரலாற்று நூல், வாழ்க்கை வரலாற்று இலக்கியத் துறையில் தனித்தன்மையோடு நிலைத்து நிற்கக்கூடிய தகுதிப்பாடுடையதாகும். பதிப்புரையின் இந்தப் பகுதியை, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக் இதழில் திருமிகு த. ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய வாசகத்தோடு நிறைவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும். வல்லிக்கண்ணன் போன்ற அறிஞர்கள் புதிதாக ஒன்றும் எழுதக்கூடவேண்டாம் தாங்கள் எழுத வந்த நாள்தொட்டு தமிழ்க்கலை-இலக்கிய உலகம் சம்பந்தப்பட்ட தமது அனுபவங்களை எழுதினால், புதிய தமிழ் இலக்கியத்தின் சரித்திரத்தை அல்லது அதன் தலையெழுத்தைத் தமிழர்கள் நன்கு புரிந்துகொள்ளமுடியும். (சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன், ப.17)