பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 互2ア செய்திகளும் தந்து கொண்டிருந்தது இந்து நேசன், அதனாலேயே மக்களிடம் அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நாளிதழான செய்திப் பத்திரிகையை இரண்டாக மடித்த அளவில் 4 பக்கங்கள்தான் இருக்கும். விலை 4 அனா. வாரம் தோறும் வெளிவந்தது. பத்திரிகை வருகிற நாளன்று கடைகள் முன் பெரும் கூட்டம் ஆவலோடு காத்து நின்றது. வந்த உடனேயே பிரதிகள் தீர்ந்துவிடும். பலருக்கு இதழ் கிடைக்காது. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதில் முனைப்பாக இருந்த விற்பனையாளர்கள் ஒரு பிரதியை ஒரு ரூபாய் விலைக்கு விற்றார்கள். அப்பவும் அதற்குக் கிராக்கிதான். ஒரு ரூபாய் கொடுத்து ஒரு பிரதி வாங்கியவர் அதைப் படித்து முடித்ததும் வாடகைக்குப் படிக்கக் கொடுத்தார். படிப்பதற்கு ஒரு நபருக்கு நான்கணா என்று வசூலித்தார். அதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இவ்விதம் வாடகைக்குப்பெற்றுப் படிக்கிறவர்களும், படிப்பதற்காகக் காத்திருந்தவர்களும் திருச்சி நகரின் பூங்காக்களிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், இதர முக்கிய இடங்களிலும் அதிகமாகவே தென்பட்டார்கள் அந்நாட்களில், இந்துநேசன் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. மக்களின் ருசியைவாசக ரசனையைப்-புரிந்து கொண்டுள்ள வணிகநோக்குப் பத்திரிகைக்காரர்கள் இந்நாட்களிலும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். சினிமாக்காரர்கள் பற்றிய கிளுகிளுப்புச் செய்திகளையும், வதந்திகளையும் ஊகங்களையும் சுவாரசியமாக வழங்கி வாசகர்களை ஈர்க்கிறார்கள். அந்நாட்களில் இல்லாத வசதிகள் இந்நாளைய பத்திரிகைக்காரர்களுக்கு இருக்கின்றன. வசீகரிக்கும் 'டோஸ்'களில் நடிகைகளையும் நடிகர்களையும் படம்பிடித்து, பளிச்சிடும் வர்ணங்களில் அச்சிட்டுக் கவர்ச்சி பண்ண முடிகிறது இப்போது. திடீரென்று ஒருநாள் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். படஉலகப் பிரபலஸ்தர்கள் பலர் சந்தேகிக்கப்பட்டார்கள். அந்நாளைய மிகமுக்கிய நட்சத்திரங்களான எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ். கிருஷ்ணனும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்கு நடந்தது. பிறகு அவர்கள் தண்டிக்கப்பெற்றுச் சிறைவாசம் அனுபவித்தார்கள். அது வேறு வரலாறு. இந்து நேசன் பத்திரிகை மஞ்சள் பத்திரிகை என இனம் காணப்பட்டது. அந்நாட்களில் புலனாய்வு இதழ்கள் என்பன தோன்றியிருக்கவில்லை. பிற்காலத்தில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னல் புலனாய்வுப் பத்திரிகை-என்று பலப்பல இதழ்கள் தோன்றின. அவற்றில் அநேகம் மஞ்சள் பத்திரிகை' தரத்திலேயே இருந்தன என்று சொல்லலாம்.