பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 13 அனைத்துத் தரப்பினரும் வியந்து போற்றக்கூடிய ஒரு சாகச நாயகனாக நான் வாழ்ந்து வளரவில்லை. பலரையும் வசீகரிக்கக் கூடிய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு எதிர்ப்பட்டதுமில்லை. வாழ்க்கைப் பெருவெள்ளத்தில் கலந்து, வகைவகையான நிகழ்வுகளை எதிர்கொண்டு, சுவையாக விவரிப்பதற்கு ஏற்ற பல்வேறு அனுபவங்களை நான் சுவைத்ததுமில்லை. வாழ்க்கை நதியின் ஓரத்தில் ஒதுங்கி நின்று அனைத்தையும் அனைவரையும் சும்மா வேடிக்கையாகப் பார்த்துத் திருப்தி அடைந்த அப்பாவி நான். இந்நிலையில் ஏன் நான் என் கதையை எழுத வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் அப்படிப் பார்த்த வாழ்க்கை ஏற்படுத்திய மனப்பதிவுகளை எழுதுங்கள். உங்களுடைய வாழ்க்கை சாதாரணமானது என்று நீங்கள் கூறினாலும் நீங்கள் ஏற்று வாழ்ந்த வாழ்க்கை முறையைச் சாதாரணமாகப் பலரும் ஏற்று நடக்க இயலாது என்றே தோன்றுகிறது. நீங்கள் நடந்துவந்த பாதையைப்பற்றி, வழியில் நீங்கள் கண்டறிந்தவற்ற்ைப் பற்றி எழுதுங்கள். அவை அவசியம் எழுதப்பட வேண்டியவை என்று முக்கியமானவர்கள் அழுத்தமாகச் சொல்லிவந்தார்கள். பார்க்கலாம், எழுதலாம் என்று சொல்லிச் சொல்லியே காலத்தை ஒட்டினேன் நான். எனது எண்பதாவது வயது தொடங்கியது. சேலம் நண்பர் கவிஞர் சந்திரசேகரன் அகால மரணமடைந்த தன் மகன் நினைவாக, அசோக்குமார் சிந்தனையாளர் மன்றம் அமைத்து, ஓர் அறக்கட்டளை நிறுவினார். தமிழ்ப்பணி புரிந்தோர்க்கு விருது வழங்கிப் பொற்கிழியும் அளிப்பது என்று அவர் தீர்மானித்தார். அத்திட்டத்தைச் செயல்படுத்த முனைந்ததும் முதன் முதலாக வல்லிக்கண்ணனுக்கு விருது வழங்கிக் கவுரவிப்பது என முடிவு செய்தார். அதற்காக 1999இல் ஒரு விழா ஏற்பாடு செய்தார். - சேலத்தில் நடைபெற்ற அந்த விழாவுக்கு அமுதசுரபி ஆசிரியர் நண்பர் விக்கிரமன் தலைமை தாங்கினார். அவர் உரை நிகழ்த்தியபோது, எண்பது வயதை எட்டியுள்ள வல்லிக்கண்ணன் அவருடைய சுயசரிதையை எழுத வேண்டும்; அதை நான் மாதம்தோறும் அமுதசுரபியில் தொடர்ந்து வெளியிடத் தயாராக இருக்கிறேன். அவர் எழுதக்கூடிய சுயசரிதை அவருடைய வரலாறாக மட்டும் இராது; தமிழகத்தின் வரலாறு சம்பந்தப்பட்ட, தமிழ் இலக்கியத்தின் அறுபது எழுபது வருட வரலாறு சார்ந்த முக்கிய தகவல்களைக் கொண்டதாகவும் இருக்கும். அதனால் அவர் மறுக்காமல் இந்தப் பணியைச் செய்ய இசைவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். என்னைப் பாராட்டியும் வாழ்த்தியும் பேசிய கவிஞர் எழுஞாயிறும் நான் சுயசரிதை எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார்.