பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

p?0 வாழ்க்கைச் சுவடுகள் அதன் அருகில் ஓடுகிற தாமிரவர்ணி ஆறு தான். அந்தச் சூழலில் நிலவுகிற அமைதியும் அழகும் என் உள்ளத்துக்கு இதம் தருகின்றன. அளவிலா மகிழ்ச்சி அளிக்கின்றன. காலையிலும் மாலையிலும் ஆற்றுக்குப் போய்த் தனிமையில் பொழுது போக்குவதும், குளித்து மகிழ்வதும் விசேஷமான இனிய அனுபவங்களாகும் எனக்கு. சென்னையில் இருக்கிற நாட்களில் காலையிலும் மாலையிலும் கடலோரம் சென்று மணிக்கணக்கில் தனித்திருப்பது எனக்குப் பிடித்த காரியமாக இருந்தது. வெகு காலம் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து, கடற்கரைக்குப் போய் வருவது எனக்கு மகிழ்வு தராத செயலாகிவிட்டது. ராஜவல்லிபுரத்தில் தனித்திருந்த பெரிய வீடு வசதியானது. அங்கும் ஏகப்பட்ட புத்தகங்கள். பழங்காலப் பத்திரிகைகள், என் கையெழுத்துப் பத்திரிகைகள் மற்றும் பல எழுத்துப்பிரதிகள் இருந்தன. என் அம்மாவும், பெரிய அண்ணாச்சி கலியாண சுந்தரமும் வசித்தார்கள். அதனாலும் நான் ஆண்டுதோறும் அந்த ஊருக்குப் போய்ப் பல மாதங்கள் தங்கினேன். பெரிய அண்ணாச்சிக்குக் கல்யாணமாகிச் சில வருடங்களில் மனைவி இறந்துபோனாள். அவர்களுக்கு ஒரே மகள். அண்ணாச்சி மறுவிவாகம் செய்து கொள்ளவில்லை. மகளை வளர்த்து, பெரியவளாக்கி, திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையைத் திருப்திகரமாக நிறைவேற்ற முடிந்தது. பொருளாதார சிரமங்கள் எப்போதும் இருந்து வந்தன. என் இரண்டாவது அண்ணா கோமதிநாயகமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் வேண்டாம் என்றுதான் வெகுகாலம் வரை சொல்லிக் கொண்டிருந்தார். நான் திருமணம் செய்து கொள்வதில்லை என்று சின்ன வயசிலேயே உறுதிபூண்டு விட்டேன். இதனால் எல்லாம் எங்கள் அம்மா மனஅமைதியின்றி அவதிப்படுவதும், எங்களைக் குறை கூறுவதும் இயல்பாயிற்று குடும்பத்தில் எல்லோருமே சன்னியாசிகள் மாதிரி ஆகிவிட்டால் என்ன அர்த்தம்? யாராவது ஒருவர் கல்யாணம் பண்ணிக் குலம் விளங்கச் செய்ய வேண்டாமா? என்று குமைவதும் சண்டை பிடிப்பதும் சகஜமாயின. இறுதியில், யாராவது கல்யாணம் செய்து குடியும் குடித்தனமுமாக வாழவில்லையென்றால், நான் கிணற்றிலே விழுந்து செத்துப்போவேன் என்று அடம்பிடித்து மிரட்டலானாள் அம்மா நான் மனம் மாறவில்லை. என் அண்ணா கோமதி நாயகம் அம்மாவுக்கு மனதிருப்தியும் அமைதியும் அளிக்க இசைந்தார். 1963இல், அவருக்கு அவரது நாற்பத்தைந்தாவது வயதில், திருமணம் நிகழ்ந்தது.