பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 187 முடிவில் மாமன்னன் மிகத் திறமையாளனாக- ஆரம்பம் முதலே அனைத்தையும் அறிந்து வந்திருப்பவனாக, சூழ்ச்சிகள் பலவற்றையும் ஆற்றலோடு முறியடிக்கும் சக்திமானாக ஓங்கிநிற்பான். இது தான் சரித்திரக் கதை ஃபார்முலா வாகப் பல ஆசிரியர்களாலும் கையாளப்படுகிறது. ஒரு சிலர், தாங்கள் உண்மையான வரலாற்றை ஆராய்ந்து, நடந்தனவற்றையே சித்திரித்திருப்பது போல, இடங்களுக்கான வரைபடங்கள் தீட்டுவார்கள் அடிக்குறிப்புகள் எழுதிவைப்பார்கள்: சம்பந்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேரேபோய் ஆதாரங்களைத் தேடியதாக எழுதுவார்கள். ஆனாலும் அவர்களும் வழக்கமான பாணியிலேயே கதை பண்ணியிருப்பார்கள். சாண்டில்யன் தனக்கெனத் தனி உத்திகளைக் கையாள்வது வழக்கம். அவர் எழுதும் சரித்திர நாவல்களில் சிருங்கார ரசம் பெருகி ஓடும். பெண் அங்க வர்ணனைகள் அதிகமாக இடம் பெறும். தமிழ் சினிமாவில் கட்டாய அம்சங்களாகி விட்டவை போல, அவருடைய நாவல்களிலும் படுக்கை அறைக்காட்சி, அழகி குளத்தில் குளிக்கும் காட்சிகள், அவள் மழையில் நனைகிற காட்சி கண்டிப்பாக இடம் பெறும். அச்சமயங்களில் அலங்காரவல்லியின் மெல்லிய ஆடை அவள் உடம்பில் எப்படிப்படர்ந்து என்னென்ன அழகுகளை எடுத்துக் காட்டின என்று சுவையான வர்ணனைகள் உண்டு. இவற்றை எல்லாம் கதாநாயகன் மறைந்து நின்று பார்த்து ரசிப்பது தான் முக்கிய அம்சமாகும். படுக்கையில் இளவரசி கிடந்த திருக்கோலம் பற்றியும், அவள் புரண்டு திரும்பிப்படுத்த அழகு அப்போது அவளது ஆடை எங்கெங்கு விலகின. திரையின் பின் பதுங்கிநின்ற கதாநாயகன் காணக்கிடைத்த அற்புதங்கள் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருப்பார் சாண்டில்யன். இன்னொரு நாவலில், படுக்கையறைக்குப் பதிலாக பூங்காவனத்துப் பூஞ்சுனை வரும் அதன் அழகான - அகலமான-சிறுசுவர் மீது அழகி படுத்திருப்பாள் ஒயிலாக அவளது நிழல் நீரில் படிந்து கிடந்த கவர்ச்சித் தோற்றத்தை விரிவாக வர்ணித்திருப்பார் ஆசிரியர். - இவ்விதம் வாசகர்களைக் கிறங்கவைக்கும் உத்திகள் சரித்திர நாவல்களில் அதிகம் ஆளப்படுகின்றன. அந்த அந்தக் காலத்துச் சமூக நிலைமைகள், மக்களின் வாழ்க்கை முறைகள், கலாசாரம் போன்றவை அவற்றில் பதிவு செய்யப்படுவதேயில்லை. இத்தன்மையில் நான் என் எண்ணங்களைச் சொன்னேன். கேட்டிருந்தவர்கள் வெகுவாக ரசித்தார்கள். எழுத்தாளர் சாண்டில்யன் அப்போது அங்கே இல்லை. முதல்நாள் கூட்டத்தில் பேசிவிட்டு, அன்று இரவே அவர் சென்னைக்குத் திரும்பிவிட்டார்.