பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 வாழ்க்கைச் சுவடுகள் இது மகாகவி பாரதியாரின் இதயஒலியாகவும் உந்துசக்தியாகவும் இருந்தது. இத்தகைய உள்ளக் குறுகுறுப்புப் பெறுகிறவர்கள் பயனுள்ள காரியங்கள் செய்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முனைகிறார்கள். எனது இளம் பிராயத்தில் இருந்தே என்னுள் மந்திரம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. இவ்வரிகள். நாட்களை வீணாக்காமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள்உந்துதல் என்னை இயக்கியது. பிறப்பு முதலே நான் பலவீனனாக, நோஞ்சானாக இருந்தேன். வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. பார்ப்பதற்குச் சின்னப்பையன் போலவே தோற்றம் கொண்டிருந்தேன். அதனால் பெரியவர்கள் என்னைச் சிறியவன் என்றே எப்போதும் ஒதுக்கிவைத்தார்கள். சின்னஞ்சிறுவர்களோ, தம்மை விடப் பெரியவன். அவர்களோடு சேர்ந்து விளையாடத் தகுதியற்றவன் என்று கருதி விலக்கினார்கள். ஆகவே நான் தனியன் ஆகவே இருந்தேன். அதிகமான கூச்ச கபாவம் பெற்றவனாகவும் இருந்தேன். எனக்குப் புத்தகங்கள் துணை சேர்ந்தன. சதா படிப்பதில் தனி இன்பம் கண்டேன். நான் நான்காம் வகுப்புப் படித்த காலத்தில் இருந்தே, பாடப் பத்தகங்களுக்கும் மேலாக இதர பல கதைப்புத்தகங்கள் படித்து மகிழ்வதில் ஆர்வம் கொண்டேன். கதைகள் என்னை வசீகரித்தன. கதைசொல்லிகளின் நடுவிலே வளர்ந்தேன் நான். என் அம்மா ராசா ராணி கதைகள், மாயதந்திரக் கதைகள், மோகினிக் கதைகள் எனப் பலரகமான கதைகளையும் தற்காலத்தில் தொன்மக் கதைகள் என்று மதிப்பிடப் பெறுகிற பலவிதமான கதைகளையும் சுவாரசியமாகச் சொல்வது வழக்கம், அண்டை அயலார்கள் பேய் பிசாசுகள் திருடர்கள் உலாவும் கதைகள் சொன்னார்கள். என் அப்பா அரசுப் பணியாளர். கலால் வரி வசூல் செய்யும் இலாகாவில் இன்ஸ்பெக்டர்' பதவி, உப்பளத் துணை ஆய்வாளராகவும் இருந்தார். அவருடைய அனுபவங்களோடு, விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள் போன்றவற்றையும் அட்டா சுவையாகச் சொல்வது உண்டு. தந்தையின் கீழ்ப் பணிபுரிந்த காவலர்களில் பாலகிருஷ்ணநாயுடு என்று ஒருவர் இருந்தார். அவர் புராணக் கதைகள், கடவுளர் திருவிளையாடல்கள் போன்ற கதைகள் சொல்வார். நான்காம் வகுப்பு உபாத்தியாயர் இராமசாமி பிள்ளை, பாடங்களோடு சேர்த்து இலட்சிய மனிதர்களின் கதைகளைக் கூறினார்.