பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #95 பெற்றுவந்தார். அவர் தன்னுடைய கதைகள் புத்தகமாகப் பிரசுரம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆயினும் வாய்ப்புகள் அப்போது கிட்டவில்லை. அந்நாட்களில் அவரும் கவிஞர் தமிழ் ஒளியும் தினந்தோறும் என்னைச் சந்திக்க வந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். தமிழ் நாட்டு வாசகர்கள், பத்திரிகைகள், புத்தக வெளியீட்டாளர்களின் போக்குகள் பற்றி ஆங்காரத்தோடு அவர்கள் காரசாரமாகக் கருத்துகள் தெரிவிப்பார்கள். 'ஓர் எழுத்தாளனின் நியாயமான ஆசை. அவனது எழுத்துக்கள் புத்தகமாக வெளிவர வேண்டும் என்பது. ஆனால் தமிழ் நாட்டில் இந்த நியாயமான ஆசை நிறைவேறக்கூட வழியில்லையே. புத்தக வெளியீட்டாளர்கள், பிரபல பத்திரிகைகளில் தொடர்கதைகளை எழுதி கவனிப்புப் பெற்றவர்களின் கதைகளை உடனுக்குடன் ஏற்றுப் புத்தகங்களாக்கி விடுகிறார்கள். சிலருக்கு முன்பணமாகவே ரூபாயும் தருகிறார்கள். அதே சமயம் நல்ல எழுத்துக்களைப் புத்தகமாக்கத் தயங்குகிறார்களே என்று ஜெயகாந்தன் ஒரு சமயம் குறிப்பிட்டார். அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து முதன்முதலில், ஒரு பிடி சோறு என்ற பெயரில், எழுத்தாளரும் ஜெயகாந்தனின் நண்பருமான விந்தன்தான் புத்தகமாக வெளியிட்டார். காலப்போக்கில் நிலைமை மாறியது. ஜெயகாந்தன் கதைகளையும் நாவல்களையும் 'ஆனந்தவிகடன் விரும்பிக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் காலம் வந்தது. இதர வணிகநோக்கு வார இதழ்களும் அவருடைய எழுத்துக்களை வெளியிட்டன. இயல்பாகவே புத்தக வெளியீட்டாளரும் அவருடைய எழுத்துக்களை உடனுக்குடனே புத்தகங்களாக வெளியிடுவதில் உற்சாகம் கொண்டனர். ஒரு சந்தர்ப்பத்தில், தமிழ்ப் புத்தகாலயம் அதிபர் கண. முத்தையா என்னிடம் சொன்னது என் நினைவில் நிலையாகப் பதிந்துள்ளது. அவர் கூறினார். 'உங்களுடைய எழுத்துக்களைப் பதிப்பாளர்கள் புத்தகமாக வெளியிடத் தயங்குவது, அவை வேகமாக விலை போகமாட்டா என்ற எண்ணத்தினால்தான். சில எழுத்தாளர்களின் எழுத்துக்கள், அவர்களுடைய வாழ்நாளில் போதிய கவனிப்பைப் பெறத் தவறி விடுகின்றன. அவர்கள் இறந்த பிறகு நல்ல கவனிப்பைப் பெறுகின்றன. பாரதியார், புதுமைப்பித்தன் இவர்களுடைய எழுத்துக்கள், அவர்கள் இறந்த பின்னர் தான் பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளன. இன்னொரு நிலைமையும் உண்டு. உங்களுடைய எழுத்துக்கள் பலவும் புத்தகங்களாக வர வேண்டுமானால், உங்களுக்கு ஒரு மார்க்கெட்டை நீங்களே உற்பத்தி செய்து தர வேண்டும். மு. வரதராசனார் விஷயத்தில் அப்படித் தான் நடந்தது.