பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 255 எனவே, என்னைப் போன்றவர்களின் எழுத்துகளுக்குப் பத்திரிகை உலகில் தேவை இல்லாமல் போய்விட்டது. அவர்களது தேவைக்கு ஏற்ப என் போக்கை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. எனது வாழ்க்கைத் தேவைகள் மிகவும் குறைவு சாப்பாடு விஷயத்தில் கூட நான் மிக எளிமையையே கைக்கொண்டிருந்தேன். நான் உயிரோடிருந்து உடலில் உழைப்பதற்குப் போதுமான தெம்பு தரக்கூடிய சிறிதளவு உணவு எனக்குப் போதும் என்று சொல்லிவந்தேன். ஒரு காலகட்டத்தில் மூன்று வேளையும் ஒரு சில இட்டிலிகளையும் காப்பியையும் உண்டு வாழ்ந்தேன். பொருளாதாரம் மிகத் தாழ்ந்திருந்தபோது, ஒருவேளை உணவு மட்டுமே போதுமானது எனக்கொண்டிருந்தேன். சில நாட்களில் காப்பியே என்னை வாழவைக்கும் ஜீவசத்து ஆக இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் என் அண்ணா, நீ போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்று கூறி எனக்குத் தாராளமாகப் பொருளுதவி செய்ய முனைந்தார். அவருக்குக் கிடைக்கிற போனஸ் தொகை, உபரி வருமானம் எல்லாவற்றையும் எனக்கே தந்து உதவினார். நீங்கள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும். உங்களுக்கு உதவுவதற்கு உங்கள் அண்ணன் இருப்பதனால் இப்போது உங்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. உங்கள் அண்ணனின் உதவி இல்லையென்றால், நீங்கள் ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்துதான் இருப்பீர்கள், பண வருவாய்க்காக இப்படிச் சிலர் என்னிடம் கூறினார்கள். எனது நலனில் அக்கறை கொண்ட நண்பர்கள் அவர்கள். பொருளாதார எற்ற இறக்கங்கள் என்னைப் பாதிக்கமாட்டா. சென்னை நகரில் வாழ முடியாது போனாலும் எனக்குக் கவலை இல்லை. தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் பொதிகை மலையில் உயரே எங்கோ இருக்கிறார் என்று இன்னும் நம்பப்படுகிறது. உண்மையில் அவர் அங்கே இருக்கிறாரா என்று கண்டறியவும், அப்படி அவர் இருந்தால் அவரோடு சேர்ந்து கொள்ளவும் நான் மலைமேல் போகிறேன் என்று அறிவித்து விட்டு, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளுக்குள் போய் மறைந்து விடுவேன் என்று சொன்னேன். எழுபதாவது வயதில் எனக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தின் போது நான்மேடையில் இதைக் கூறினேன். எனக்கு ஏமாற்றங்கள் இல்லை . நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்பதால் என்றும் தெரிவித்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் சில பத்திரிகைகள் இதை வெளியிட்டிருந்தன. அதைப் படித்தவர்களில் சிலர் என் மன உறுதியை வியந்து பாராட்டினார்கள். பிறர் வியந்து பாராட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட அலங்கார வார்த்தைகள் அல்ல அவை என் உள்ளத்தின் ஒலியேயாகும்.