பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - வாழ்க்கைச் சுவடுகள் என்னையும் எஸ்.பி. கிருஷ்ணனையும் அனுப்பினார். அதன் பயனாக டி.கே. சண்முகமும் அவருடைய சகோதரர்களும் எனக்கு அறிமுகமானார்கள். பிறகு நல்ல நண்பர்களானார்கள். நடிகர்கள் டி.வி. நாராயணசாமி, எஸ்.வி. சுப்பையா முதலியோரும் பிரியமுடன் பழகி நண்பர்களாயினர். கோவையில் நான் இருந்த போதுதான். ஏ.கே. செட்டியாரின் குமரி மலர்' வெளிவரத் தொடங்கியது. யுத்த கால நெருக்கடிகளின் விளைவாகப் புதிய பத்திரிகைகள் ஆரம்பிக்க முடியாத நிலை தலையெடுத்திருந்தது. பத்திரிகை தொடங்க அரசின் அனுமதி பெற்றாக வேண்டும் அது மறுக்கப்பட்டு வநதது. இந்த நிலையில் ஏ.கே. செட்டியார், சட்டத்தில் ஒட்டை கண்டு, சாமர்த்தியமாக ஒரு புதுவழியைக் கடைப்பிடித்தார். பத்திரிகை என்று குறிப்பிடாமல், மாதம் ஒரு புத்தகம்' என்ற தன்மையில் 'மலர்' எனும் பெயரில், பத்திரிகை அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு வெளியீட்டைப் பிரசுரிப்பது என்பது தான் அவர் கண்ட வழி. அதன்படி குமரி மலர் எனும் மாத வெளியீட்டை அவர் தொடங்கி நடத்தினார். தரமான விஷயங்கள் கொண்ட இலக்கிய வெளியீடாக அது அமைந்திருந்தது. ஏ.கே. செட்டியார் காட்டிய வழியில் ஏகப்பட்டபேர் தமிழ்நாட்டில் மாதம் ஒரு புத்தகம் வெளியிடலானார்கள். கதை மலர், தமிழ் மலர், கதைக்கொடி, புதுமலர் என்றெல்லாம் பெயர் வைத்துப் பிரசுரித்தார்கள். சில தரமான தொகுப்புகளாகவும், பல சாதாரண வெளியீடுகளாகவும் இருந்தன. இவ்வாறு காலம் போய்க் கொண்டிருக்கையில், என்னுள் அதிருப்தி தோன்றி உறுத்தலாயிற்று. நான் இங்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தடம் விழுந்த நொடியில் வண்டி தள்ளாடி நகர்வது போல் தான் இருந்தது. முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வாய்ப்பே இல்லை என்று நிச்சயமாகப்பட்டது. இங்கிருந்து போக வேண்டியது தான் என்றது மனம் செட்டியாரிடம் இதை நேரடியாகச் சொல்லத் தயக்கம். அவர் பரிவுடனும் பாசத்தோடும் பழகினார். குடும்பத்தாரும் அளவிலா அன்பு காட்டி வந்தார்கள். இருப்பினும், எனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நான் வெளியேற வேண்டியது அவசியம் என்று மனக்குரல் திடமாகக் கூறிவந்தது. எனவே, என் ஆசைகளையும் திருப்தி தராத நிலையையும் விவரித்து ஒருநீண்ட கடிதம் எழுதி அதைச் செட்டியாரிடம் அளித்தேன். அதைப் படித்த அவர் யோசனையில் ஆழ்ந்தார். சாயங்காலம் அமைதியாகப் பேசலாம் என்று சொல்லிவிட்டு, வழக்கமான அலுவல்களைக் கவனிக்க வெளியே போனார்.