பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 83 அன்று மாலை என்னை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார். வழியில் ஓர் ஒட்டலில் சிற்றுண்டி சாப்பிட்டோம் ஊரில் ஓர் ஓரமாக இருந்த பெரிய குளத்தின் நீண்ட அமைதியான கரைக்கு இட்டுச் சென்றார். எனது விருப்பங்களை மனம் திறந்து எழுதித் தெரிவித்ததற்காகப் பாராட்டினார். இலக்கியப் பத்திரிகை நடத்தும் எண்ணம் தனக்கும் நெடுநாட்களாக உண்டு என்றார். பாரதிதாசன் தன்னுடனிருந்து சினிமா உலகத்துக்குத் துணைபுரிந்த நாட்களில், அவருக்காக 'நிலா என்ற பெயரில் ஓர் இதழ் தொடங்க முன்னேற்பாடுகள் செய்ததையும், அத்திட்டம் நிறைவேறாமல் போனதையும் விவரித்தார். 'நிலாவுக்காகச் செய்த பிளாக்குகள் எல்லாம் இருக்கின்றன. இப்போது குமரி மலர் மாதிரி, நிலா என்று மாதம் ஒரு புத்தகம் கொண்டு வருவோம். அத்துடன் உங்கள் எழுத்துக்களைப் புத்தகங்களாக வெளியிடலாம். அதற்கான விளம்பரத்தைச் சினிமா உலகம் வருகிற இதிழிலேயே அச்சிடலாம் என்று கூறினார். வீடு திரும்பியதும், பழைய பிளாக்குகளில் தேடி எடுத்து நிலா சம்பந்தமான பிளாக்குகளைக் காட்டினார். பொற்காலப் பிரசுராலயம் - வெளிவர இருக்கும் புதிய புத்தகங்கள் என்று சில நூல்களின் பெயர்களை எழுதினார். அவற்றில் இளங்கோவன் கதைகள், வல்லிக்கண்ணன் கதைகள் என்பவற்றையும் சேர்த்தார். - அந்த விளம்பரம் சினிமா உலகம் இதழில் வெளிவந்தது. இளங்கோவன் (ம.க. தணிகாசலம் புதுமைப்பித்தனுடன் தினமணி'யில் பணியாற்றியவர். நல்ல சிறுகதைகள் எழுதியிருந்ததார். ஆஸ்கார் ஒயில்டு எழுத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இலக்கியவாதி. அவருடைய கதைகளிலும், கட்டுரைகளிலும் ஒயில்டு எழுத்துக்களின் தத்துவங்களின் சாயைதென்படும் தினமணி 1957ஆம் வருட ஆண்டு மலரில் இளங்கோவன் 'சாவே வா' என்றொரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்டது. அப்புறம் இளங்கோவன் சினிமாத் துறையில் ஈடுபட்டுத் திரைப்பட வசனத்தில் புதுமைகளும் இலக்கியநயமும் சேர்த்துப் புகழ்பெற்றார். பி.எஸ். செட்டியாருக்கு நல்ல நண்பர். இளங்கோவன் எழுத்துக்கள் அதுவரை புத்தகமாகப் பிரசுரம் பெற்றிருக்கவில்லை. அவற்றை வெளியிட வேண்டும். என்ற ஆசை செட்டியாருக்கு இருந்தது. அதற்காக இளங்கோவனின் அனுமதியையும் அவர் பெற்றிருந்தார். ஆசைகள் எல்லாம் செயல்வடிவம் பெற்றுவிடக்கூடும் என்ற சாத்தியப்பாடு வாழ்க்கையில் இருக்குமானால், எத்தனை எத்தனையோ அற்புதங்களும் மகத்தான சாதனைகளும் விளைந்து கொண்டே இருக்கும்.