பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 89 பணியாற்றிய சக்திதாசனுக்கே இதழ்ப் பொறுப்பைத் திரு.வி.க. தந்துவிட்டார் என்றும் செய்தி நிலவியது. சக்திதாசன் சுப்பிரமணியம், ராதாமணி அம்மையார் துணையுடன் நவசக்தியைத் தனி இலக்கிய இதழாக, புத்தக வடிவில் வெளியிடலானார். கேராமநாதன் அவருடன் சேர்ந்து உதவிபுரிந்து வந்தார். 1944 ஜனவரி இதழ் வெளிவரவேண்டும். பணத்துக்காகச் சக்திதாசனின் தபாலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதழுக்குத் தேவையான விஷயங்கள் சிறிது சிறிதாக அச்சுக் கோக்கப்பட்டு, இரண்டு இரண்டு பக்கங்களாக அச்சாகிவந்தன. வ.ரா. (வ. ராமஸ்வாமி) நவசக்தியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் சமூகநிலைமைகள், கல்வி வளர்ச்சி பற்றிப் பொதுப்படையான சிந்தனைகளைச் சிறுசிறு கட்டுரைகளாக்கி வந்தார். மாதம்தோறும் அவரே அலுவலகம் வந்து கட்டுரையைக் கொடுத்துச் செல்வது வழக்கம் என்று தெரிந்தது. அதன்படி ஜனவரியில் ஒருநாள் வந்தார். மனிதன் இழுத்துச் செல்லும் ரிக்ஷாதான் அந்நாட்களில் நடைமுறையில் இருந்தது. சென்னையில் முக்கிய ரஸ்தாக்களில் டிராம் வண்டிகள் ஓடின. ரோடு நடுவில் இரும்புத் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டிருந்தன. பெரிய ரயில் பெட்டி மாதிரியானது. டிராம் வண்டி நீளத்துக்கு பெஞ்சுகள் உண்டு. எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏறலாம். நெரிசலான நேரங்களில் ஆட்கள் நெருக்கமாக நின்று கொண்டும் பிரயாணம் செய்வார்கள். அந்நாட்களில் அரசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் ஓடவில்லை. வ.ரா. எங்கும், மனிதன் இழுக்கும் ரிக்ஷாவில்தான் போய்வந்தார். 'மனிதாபிமானம் பற்றிப் பேசுகிற-எழுதுகிற வ.ரா. மனிதன் இழுக்கும் ரிக்ஷாவில்தான் போகிறார். பாவம், கஷ்டப்படுகிற ஒருவனை ஆதரிப்பதே என் நோக்கம் என்கிறார். இருக்கலாம் ஆனால் மாலை நேரங்களில் அவர் கடற்கரைக்கு ரிக்ஷாவில் போய் என்ன செய்கிறார் தெரியுமா? ரிக்ஷாவைவிட்டுக் கீழே இறங்கமாட்டார். ரிக்ஷாக்காரனை, ரிக்ஷாவைத் தாங்கிப் பிடித்தபடியே நிற்கவைத்து அவர் ரிக்ஷாவில் ஜம்மென வீற்றிருந்தபடியே காற்று வாங்குவார். இப்படி ரொம்ப நேரம் ரிக்ஷாக்காரனிடம் வேலை வாங்குவார். இதுதான் மனிதாபிமானமோ? என்று கே. ராமநாதன் என்னிடம் குறிப்பிட்டது உண்டு. - நவசக்தி ஜனவரி இதழுக்குக் கட்டுரை தருவதற்காக வ.ரா. அலுவலகம் வந்தபோது நானும் ராமநாதனும் அங்கே இருந்தோம். திருலோக சீதாராமனும் இருந்தார். ராமநாதன் என்னை அறிமுகப்படுத்தினார்.