பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

51


கெரனகி, நான்கு வருஷங்கள் பள்ளியில் படித்து விட்டு, தபால் நிலையத்தில் தந்திச் சேவகனாக வேலையில் அமர்ந்தார். தினம் 18 மணிநேரம் வேலை செய்தார். தந்திச் சேவகன் வேலையிலிருந்து கொண்டே தந்தி அடிக்கும் வேலையையும் கற்றுக் கொண்டார். சிறிது காலத்திலேயே அவர் தந்திக் குமாஸ்தா வேலையில் அமர்ந்தார். பிறகு மேலதிகாரியாகவும் பதவி உயர்ந்தது. இச்சமயத்தில்தான் அவருக்கு எதிர்பாராத வகையில் ‘புதையல்’ ஒன்று கிடைத்தது. அதைப் புதையல் என்று சொல்வதே தகும். ஒருநாள், கெரனகி ஒருவேலையாக ரயிலில் பிரயாணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர் ஒரு திட்டத்தை அவரிடம் காட்டினார். ரயில் பெட்டிகளில் பிரயாணிகள் தூங்கும்படியான வசதிகளை ஏற்படுத்தும் திட்டமே அது. சக பிரயாணியின் திட்டம் புரட்சிகரமானதாக இருந்ததால், கெரனகி அத்திட்டத்தை ஒரு விலைகொடுத்து வாங்கிக்கொண்டார் அதை ரயில்வே கம்பெனிக்கு நல்ல லாபத்திற்கு விற்றார். அதிலிருந்து அவருக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கியது. அச்சமயத்தில் தான் அமெரிக்காவில் புரட்சி ஏற்பட்டது. அதன் காரணமாக ரயில் சாமான்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே கெரனகி ரயில் சாமான்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். நாளடைவில் வளர்ந்தது. கெரனகி பணக்காரர் ஆகிவிட்டார்.