பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாய்மையே பேசுக

103

திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் "வாய்மை" என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.

வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை, வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

ஒருவர் பிறிதொருவரைப் பற்றித் த கா த ன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்.

        "வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
         தீமை யிலாத சொலல்"

என்று கூறுகிறது.

வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித்தேற்றுவோம்.

நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளியவேண்டும். செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் க ண் டு ண ரா ம ல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல. ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம்தரும் சொற்களையே கூறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/105&oldid=1133235" இலிருந்து மீள்விக்கப்பட்டது