பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னா செய்யாமை

111

போகும். பழிவாங்கும் படலம் துன்பத்தின் தொடர் வரலாறாகிவிடும். எப்போதும் அச்சம், சட்டங்களின் (அறத்தின்-அரசின்) அச்சுறுத்தல் முதலியன ஒருங்கு கூடி வாழ்க்கையை நரகமாக்கிவிடும். பழிவாங்கும் இயல்புடையோனிடம் மனித நேயம் இருக்காது. அவன் கல்நெஞ்சனாக இருப்பான். கடினசித்தம் அவனுடைய சித்தம்! கொடுமைகளின் ஒட்டுமொத்தமான உருவமாக விளங்குபவனே பழிவாங்குவான்; தீமை செய்வான்.

ஆனால், மனித நேயமுடையவர்கள், சிந்திப்பவர்கள், வாழ்வாங்கு வாழ விரும்புபவர்கள் யார் ஒருவருக்கும், எவ்வுயிர்க்கும் கொடுமை இழைக்கமாட்டார்கள். மாறாக மறப்பார்கள்; மன்னிப்பார்கள்; பகைமை பாராட்ட மாட்டார்கள்; பண்பு நலஞ்சார்ந்து உறவு கொள்வார்கள். "நமக்குத் தீங்கு செய்த ஒருவரைப் பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நன்மையைச் செய்வதன் மூலமே பழிவாங்குக" என்று திருக்குறள் நெறி ஆற்றுப்படுத்துகிறது.

பழிவாங்கும், கொடுமை இழைக்கும் மனமுடையோருடைய நெஞ்சு கொதித்து நிற்கும்; அறவுரை-அறிவுரைகள் யாதொன்றும் அவர்கள் காதில் ஏறாது. ஆதலால் முதலில் இவனுடைய சினத்தைத் தணிக்க வேண்டும். அவன் சினந்தணிந்த நிலையில் கேட்கத் தகுதியுடையவன் ஆவான்; சிந்திக்க முயற்சி செய்வான். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் முதற்பணி சினந்தணிக்கும் பணியே.

எப்போதும் கெட்டவர்களைத் திருத்துவதற்குரிய ஆற்றொணாச் சினத்தில் மூழ்கி இருப்போரைத் திருத்து வதற்குரிய முதல்விதி அவர்களை மறுக்காமல் முதலில் அவர்களுடன் கொஞ்சம் உடன்பட்டு நிற்றல் வேண்டும் என்பது. இஃது உளவியல் அடிப்படையின் வாய்ப்பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/113&oldid=1133244" இலிருந்து மீள்விக்கப்பட்டது