பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52. உழைத்து உண்க !

இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.

இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர் களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம் உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.

துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.

மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. ‘உண்டி முதற்றே உலகு’ என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை “உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார் அண்ணல் காந்தியடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/119&oldid=1133252" இலிருந்து மீள்விக்கப்பட்டது