பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வாழ்க்கை நலம்

யுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப்பாங்கைத் திறனாய்வு செய்து திறனாய்வு வழி வாழ் நிலைகளை அறிந்து கடைப்பிடித்தல் சிறந்த கல்வி.

மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்னைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

திருக்குறள் 'கற்க' என்று கூறுகின்றது. ஆம்! கற்பது-இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சம், பயத்திலிருத்து விடுதலை பெற்றால் தான் கற்கும் கல்வி பயன்தரும். "கசடறக் கற்பவை கற்க" என்றது திருக்குறள். "கசடு"-மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமையுடையராதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/134&oldid=1133552" இலிருந்து மீள்விக்கப்பட்டது