பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59. அறிவு

அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி (Instrument). துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத்தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அ றி வு டை மை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.

பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடைமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/135&oldid=1133335" இலிருந்து மீள்விக்கப்பட்டது