பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வான் மழை

17

கிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். இந்த மணற் பரப்பைக் காப்பது நமது கடமை.

காற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால் நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல் மணற்பரப்பு அழிகிறது. இதை வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர். இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது.

        "விசும்பின் துளிவீழின் அல்லாமற் றாங்கே
         பசும்புல் தலைகாண் பரிது"

என்ற திருக்குறளைத் திரும்பத் திரும்ப படித்திடுக!

ஆதலால், தண்ணீரின் இன்றியமையாத் தன்மையை உணர்க! நமது நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றித் தாராளமாகச் செலவு செய்பவர்களை "தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. ஆனால் உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்து விடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீருக்குக் காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வரவேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும். வீட்டிற்கு ஒருமரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம், இளங்கோவடிகளும்

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று வாழ்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/19&oldid=1133531" இலிருந்து மீள்விக்கப்பட்டது