பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வாழ்க்கை நலம்

"யாதும் ஊரே: யாவரும் கேளிர்" என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்புதலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதையில்லை அல்லது காலம் கிடைக்கவில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

      "வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
       மிச்சில் மிசைவான் புலம்"

என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க: உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே ம னி த கு ல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/38&oldid=1133020" இலிருந்து மீள்விக்கப்பட்டது