பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13. நல்வாழ்க்கையின்
இரட்டை நாடிகள்

இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஓர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட பருவத்திற்குப் பருவம் மாறும். ஒரோ வழி சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறக்கூடும். அப்படியானால் இன்பம் நிலையான ஒன்றில்லையா? இன்பம் நிலையான ஒன்றுதான். எங்கும் எப்பொழுதும் எல்லோருக்கும் இன்பமாக இருக்கின்ற ஒன்றே இன்பம். மற்றவை எல்லாம் துன்பம்.

ஆனால் மானுடம் தற்சார்பிலே பழகிப் பழகி, துன்பந்தழீஇய இன்பத்தையே இன்பம் என்று கருதுகிறது. இன்பம் போலக் காட்டித் துன்பம் தரும் இவற்றிற்காகவே மானிடர் போராடுகின்றனர். இன்பம் சமூக நலத்தில் உருவாவது; தோழமையில் வளர்வது; காதலில் நிலைப்பது. எல்லாவற்றிற்கும் அடிப்படை சமூக நலம். நம் ஒவ்வொருவருடைய உள்ள நலமும் உடல் நலமும் கூட சமூக நலத்தினையே அடிப்படையாகக் கொள்வது.

ஆன்மாவின் உறுப்புக்களான மனம், புத்தி, சித்தம் அகத்துறுப்புக்கள், பிரிக்கப்படாத உறுப்புகள், அகத்து உறுப்புக்களே. இவைகளே அறியும் கருவிகள். அறிவுக் கருவிகளுமாம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன உடலுக்கு வாய்த்த பொறிகள். இப்பொறிகள் செயலுக்குரியன. அறிவும் செயலும் நிகழும் களம் சமூகம், தானே! ஆதலால் சமூகத்தையும் தனது வாழ்நிலையின் உறுப்பாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/39&oldid=1133021" இலிருந்து மீள்விக்கப்பட்டது