பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வாழ்க்கை நலம்

என்ற எண்ணமும் தோன்றிடின் பொறியடக்கம் தானே வந்தமையும்; புலனடக்கமும் வந்தமையும். பொறிகள் அடக்கத்திற்குத் திருக்குறள் அ ற் பு த மா ன ஓர் ஆலோசனை கூறுகிறது. ஆமையை உதாரணமாக வைத்துக் கூறுகிறது.

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம். கேள்விகளை கேட்டு அனுபவிக்கலாம், சுவையானவைகளை உண்டு அ னு ப வி க் க லா ம். நம்முடைய ஆன்ம நலனுக்குப் பயன் தராத செய்திகளில் நம்முடைய பொறிகளை ஈடுபட அனுமதிக்காமல் இழுத்து அப்புறப்படுத்தி விடவேண்டும். ஆமையின் பொறிகளைப் போல் மனிதனின் பொறிகள் ஒடுக்கக்கூடியன அல்ல. பின் என்ன செய்யலாம்? நமது பொறிகளுக்கு நாமே நலம் பயக்கக்கூடிய அனுபவங்களைப் படைத்துக் கொடுக்க வேண்டும்.

       ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
       எழுமையும் ஏமாப்பு உடைத்து. (குறள்-126)

அடுத்து நாவடக்கம் பற்றியும் மூன்று குறள்களில் பேசுகிறது. தீய சொற்களை அறவே விலக்கும்படி திருக்குறள் ஆணையிடுகிறது. இத்தகு அடக்கமுடைமையைச் சார்ந்த பண்புகள் வாழ்க்கையில் தங்கினால் வாழ்வு அறவாழ்வாக வளரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/56&oldid=1133039" இலிருந்து மீள்விக்கப்பட்டது