பக்கம்:வாழ்க்கை நலம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழுக்காறு தீண்டா உள்ளம் பெறுக!

61

திறன்களைக் கண்டு உளமாரப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுள்ள செல்வம் முதலியன நியாயமானவையே என்ற எண்ணம் தேவை. இது மட்டும் போதாது. மற்றவர்களுடைய குற்றங்குறைகளைக் கண்டு எக்காரணத்தைக் கொண்டும் மகிழக் கூடாது. அதற்கு மாறாக இரக்கம் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் வாழ்ந்து பழகின் அழுக்காறு எனும் தீய குணம் மனத்தைத் தீண்டாமல் காக்க இயலும்.

அழுக்காறு - பொறாமைக் கு ண ம் உடையவர் உள்ளம் ஊக்கத்தை இழத்தல் இயற்கை. ஊக்கத்தை இழந்த பின் ஏது ஆக்கம்? ஆதலால், அழுக்காற்றுக் குணமுடையவர்கள் ஒரு பொழுதும் வளரமாட்டார்கள்; வளமுடையவராக மாட்டார்கள். இந்த நியதிக்கு மாறாக அழுக்காறே பிறவிக்குணமாக உடையவர்கள் செல்வம் பெற்றிருந்தால் அந்தச் செல்வம் நியாயத்தின் பாற்பட்டதல்ல; நீதியொடு தொடர்புடையதல்ல. அழுக்காறுடை யாரிடம் உள்ள செல்வம். களவால் ஆகிய செல்வமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். தேர்ந்து தெளிக ! அது போலவே, அழுக்காறிலாது தூய மனப்பான்மையுடன் வாழும் மனிதர்கள் வறியவர்களாக வாழ்தலும் நெறியன்று; முறையுமன்று. இதிலும் முறைபிறழ்வுகள் உள்ளன ! தேர்ந்து தெளிதலே முறை !

அறிவியல் வளர்ச்சி, ஊக்கம் நிறைந்த உள்ளம், நன்மையைப் பாராட்டி மகிழும் இயல்பு, பிறர் பெறும் பெருஞ் சிறப்புக்களை மதித்துப் போற்றும் பண்பு ஆகியன அழுக்காறு தீண்டா உள்ளம் பெற வேண்டிய பழக்கங்கள்; வழக்கங்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை_நலம்.pdf/63&oldid=1133540" இலிருந்து மீள்விக்கப்பட்டது