பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வாழ்க்கை விநோதம்


விஷயங்களைப்பற்றிப் (பணவிஷயம் தவிர) பேசிக் கொண்டே வந்தார். சிறிது தூரம் நடந்தோம். பக்கத்தி லிருந்த கிளப்பில் பலகாரம் சாப்பிடத்தான் அவர் அழைத்து வந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.

ஹோட்டலுக்குப் பக்கத்தில் வந்தவுடன், சாப்பிடக் கூப்பிட்டார். நான் “எனக்குப் பசிக்கவில்லை” என்று சொன்னேன். பலகாரத்தைக் கொடுத்து, பணத்துக்கு நாமம் போட்டுவிடுவாரோ என்று எனக்குப் பயம். அவர் என்னைப் பிடித்து இழுக்க, நான் வரமாட்டேன் என்று மறுக்க, இப்படியே ஐந்து நிமிஷ நேரம் மல்லுக் கட்டு நடந்துகொண்டிருந்தது.

“ஒஹோ, இவர் காபி சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காது வந்துவிட்டார் போலிருக்கு, அதுதான் கிளப்பிலுள்ள ஆள் வந்து இவரைப் பிடித்து இழுக்கிறான்,’ என்று பார்ப்பவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணியே, கடைசியாக உள்ளே போய்ச் சேர்ந்தேன். சாப்பிடும் பொழுதெல்லாம் என் மனம் சரியான நிலைமையில் இல்லை; ‘பதினைந்து ரூபாய் ! பதினைந்து ரூபாய் !’ என்ற ஜபத்திலேயே ஈடுபட்டிருந்தது.

பில்லுக்குப் பணம் கொடுக்கும்போதுகூட, நான் முந்திக்கொள்ளப் பார்த்தேன். ஆனால், அவர் விட்ட பாடில்லை.

பிறகு, இருவரும் பக்கத்திலிருந்த ‘பார்க்’கில் புகுந்தோம். யுத்த விமரிசனம் செய்துகொண்டே வந்தார், நண்பர். எனக்கு ஒன்றும் ஏறவில்லை. நேரம் ஆகிக் கொண்டே யிருந்தது. வீடு திரும்ப வேண்டுமென்று தோன்றியது. ஆனால், வந்த காரியம்? கேட்டுவிடுவோம் என்ற எண்ணம்.