பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சில்லறைக் கடன்

5


ஆனால், முன்பின் அறியாத ஒரு பெண்மணியைப் பார்த்து, ஒரு வாலிபன், “கரும்பே, உன்னை....உன்னை நான்....காதலிக்கிறேன்........” என்று தைரியமாகச் சொன்னாலும் சொல்லிவிடுவான் போலிருக்கிறது; பண விஷயமாக அவரிடம் கேட்க என்னால் முடியவில்லை. எப்படியிருந்தாலும் கேட்டுத்தானே ஆகவேண்டும்? தொண்டையைக் கனைத்துக்கொண்டு, கடைசியில் கேட்டேவிட்டேன்.

அவரோ துளியும் பதறாமல், “ஆமாம். அது விஷயமாகத்தான் சொல்லலா மென்றிருந்தேன். கையிலிருந்த பணமெல்லாம் ஒரு வழியாகச் செலவழிந்துவிட்டது. அடுத்த மாசம் நானே கொண்டுவந்து தருகிறேன். உங்களுக்குக் கவலையே வேண்டாம்” என்று பஞ்சப் பாட்டுப் பாடினார். என்ன செய்வது? ‘கடன் கொடுத்தோம், பொறுத்திருப்போம், கட்டாயம் வரும்’ என்று எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். எத்த னையோ மாதங்கள் ஆயின. தவணைகள் சென்றன.

வேறொரு நண்பர், கடன் வாங்கிவிட்டு, ஆறு மாடிகள் உள்ள ஒரு கட்டடத்தில், ஆறாவது மாடியில் `ரூம்' எடுத்துக்கொண்டு இருந்துவிட்டார். அந்த வீதி வழியாகப் போக நேரும்போதெல்லாம், அவரைப் பார்த்துக் கொடுத்த பணத்தைக் கேட்க வேண்டும் என்று என் மனம் தூண்டும்.

ஆனால், எப்படி இந்த ஆறு மாடிகளையும் தாண்டிச் செல்வது ? அப்படிப் போனாலும் அவர் இருப்பாரோ, இருக்க மாட்டாரோ? இருந்தாலும் பணம் தருவாரோ, தவணை கூறுவாரோ ? என்றெல்லாம் சந்தேகங்கள் எழும்பும். நேராக நடந்துவிடுவேன்.