பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வாழ்க்கை விநோதம்


ஆனாலும், அவரை ஒருநாள் தற்செயலாக வீதியில் பார்த்துப் பிடித்துவிட்டேன். என்னைக் கண்டதும் அவர் ஒருவாறு சமாளிக்க எண்ணி, “என்ன சார், செளக்கியமா?” என்றார்-

“செளக்கிய மென்ன ? எல்லாம் கிராக்கிதான்.”

“இல்லை, ரொம்ப உடைந்து போனீர்களே என்று தான் கேட்டேன்”

“என்ன, கண்ணாடியா உடைந்து போவதற்கு?”

“அடடா, இளைத்துப் போனீர்களே என்றல்லவா கேட்கிறேன்”

“என்ன, மரமா இழைப்பதற்கு?" என்று கூறி விட்டு, “உம்மைப்போல் நாலு பேரிடம் கடன் கொடுத்தால் இளைத்தும் போவேன்; உடைந்துகூடப் போக வேண்டியதுதான்,” என்று சொல்ல எண்ணினேன். ஆனால், என்னவோ நேரே சொல்ல மனம் வரவில்லை.

இந்தச் சில்லறைக் கடன் விஷயமே இப்படித்தான். யாராரையோ சொல்வானேன்? என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். வாங்கின பணத்தைக் கொடுப்ப தென்றால், மிக்க கஷ்டமாகத்தானிருக்கிறது. வாங்கின பணமாவது! அவர்கள் கொடுத்த பணம்தான் அன்றே செலவழிந்துவிட்டதே! இன்று நம் கையிலுள்ள பணம் நாம் உழைத்துச் சம்பாதித்ததல்லவா? இதை எப்படிக் கொடுப்பது?

மாம்பலத்து நண்பரைப்பற்றிச் சொன்னேனே, அவர் பணம் இன்னமும் எனக்குத் திரும்பி வரவில்லை. நேற்று, மறுபடியும் அவரைப் பணம் கேட்கச் சென்றிருந்தேன். அவரோடு பேசிக்கொண்டே யிருக்கையில், இருவருக்கும் தெரிந்த மூன்றாவது நண்பர் ஒருவர் அங்கே வந்துகொண்டிருந்தார். அவர் தலையைக் கண்டதும்,