பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சில்லறைக் கடன்

7


நண்பரைப் பணம் கேட்காமலே, நான் திரும்பி வந்து விட்டேன். காரணம், வேறு ஒன்றுமில்லை. அந்த மூன்றாவது நபர் எனக்கு ஒரு முப்பது ரூபாய் கைமாற்றுக்கொடுத்து இரண்டு வருஷங்கள்தாம் ஆகின்றன. அதை எங்கே கேட்டுவிடப்போகிறாரோ என்ற பயம் தான்.

மொத்தத்தில், இந்தச் சில்லறைக் கடனே வாங்கப்படாது; வாங்கினாலும் திருப்பிக் கொடுக்கப்படாது. என்னைக் கேட்டால், சில்லறைக் கடன் வாங்குபவனைவிட, கொடுப்பவன் பாடுதான் நிரம்பத் திண்டாட்டமாகும்.

“கடன் கொண்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று இராமாயணத்தில் இருக்கிறதே, அதில் ‘கொண்டான்’ என்பது இடைச் செருகலாயிருக்கும்; ‘கொடுத்தான்’ என்பதுதான் சரி என்றாலோ, அந்தப் பாட்டே இடைச் செருகல்தான், ஐயா” என்று மண்டையிலே அடிக்கிறார்கள். எது எப்படி யிருந்தால் என்ன, அந்தப் புலவர் மட்டும் இந்த அற்புத நாகரிக உலகில் இருந்தால்........ இருந்தால் என்ன? அவருடன் நான் சண்டைக்குப் போய்விடுவேன் என்று நினையாதீர்கள். இருந்தாரானல், கட்டாயம், ‘கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றுதான் அவர் பாடியிருப்பார், அவர் பாடாவிட்டால், அவரிடம் ஓர் ஐந்து ரூபாய், நான் கடன் வாங்கியிருப்பேன். பிறகுமா அப்படிப் பாடாமல் போய்விடுவார் ?