பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வாழ்க்கை விநோதம்


கூட்டம்தான். எல்லோரும் வாடிக்கையாக வருபவர்கள். ஒதுப்புறமாக இருந்தாலும் எல்லோரையும் அங்கே அழைத்து வந்து வாடிக்கைக்காரர்கள் ஆக்கிவிடுவது, எது தெரியுமா? ஸலூன் ஆறுமுகம் நடந்துகொள்ளும் விதந்தான் ; அவனது எண்ணற்ற வாடிக்கைக்காரர்களில் நானும் ஒருவன் என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுவாக, கிராப் செய்துகொள்வது, எண்ணெய் தேய்த்துக்கொள்வது என்றால் எனக்கு வேப்பெண்ணெய் சாப்பிடுவது போலத்தான். இந்த இரண்டும் இல்லாவிட்டால் மனிதன் இந்த உலகில் நிம்மதியாக வாழலாம் என்பதுதான் என்னுடைய சித்தாந்தம்.

முன் காலத்தில், சில ராஜாக்கள் தூங்கும்போதே நாவிதன் வந்து வேலையை முடித்துவிடுவானாம். ராஜா எழுந்து எதிரே இருக்கும் கண்ணாடியைப் பார்த்தவுடன் தான், முகம் வழவழ என்றிருப்பது தெரியுமாம் ; சந்தோஷப்படுவாராம்.

ஏன் ? பட்டாளங்கள் கூடாரம் அடித்திருக்கும் சில இடங்களில்கூட இப்படி நடப்பதாகக் கதை சொல்லுகிறார்கள். கூடாரத்துக்கு வெளியே தலையை இழுத்து ஷவரம் செய்விட்டுப் பிறகு தலையை உள்ளே தள்ளி விடுவார்களாம், நாவிதர்கள்!

இவை உண்மையோ, பொய்யோ! எப்படி இருந்தாலும் இது மாதிரி தூங்கும்போது ஷவரம் செய்து விட்டால் நல்லதுதான். ஆனல் முகஷவரமாயிருந்தால் இப்படிச் செய்துகொண்டுவிடலாம். கிராப் எப்படிச் செய்துகொள்வது? முடியாத காரியம்தான். `தன் கையே தனக்குதவி’ என்ற பழமொழியைச் செய்கையாக முக ஷவரத்தில் வேண்டுமானால் காட்டலாம். ஆனல் கிராப் செய்துகொள்வதில் காட்ட முடியுமா? -