பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கு வந்தது

11


“ கிராப் செய்துகொள்வதில் என்ன அவ்வளவு சிரமம் ?” என்று கேட்கிறீர்களா ?

அதைத்தான் சொல்லப் போகிறேன்.

ஆறுமுகம் ஸலூனில் எப்பொழுது பார்த்தாலும் ஒரே கூட்டம்தான். அங்கு இருக்கும் நெருக்கடியைப் பார்த்தாலே, உலக நெருக்கடியை ஒருவாறு உணர்ந்து கொண்டுவிடலாம்.

காலையில் 5½; மணிக்குப் போனால் ஒருவேளை இடம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக எழுந்திருப்பது எப்படி ? பஸ்ஸிற்கும் ரயிலுக்கும் தான் எல்லோருடனும் போட்டி போடவேண்டி யிருக்கிறது. சூரியனுடனுமா எழுந்திருப்பதில் போட்டி போடுவது ? முன்னால் சூரியன்தான் எழுந்திருக்கட்டுமே என்று விட்டுவிடுவதுதான் என் சுபாவம். அப்படியிருக்க எப்படி ஸலூன் திறந்தவுடனேயே ஆஜராவது ?

நன்றாக விடிந்ததும்தான் எழுந்து செல்வேன். ஆனால் நேரே ஸலூனுக்குப் போய்விடுவது என் வழக்க மல்ல. எங்கேயோ அவசர வேலையாகப் போவது போல ஸலூனைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே நேராகப் போவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் நேராகவே சென்று வேறு வழியாக வீடு வந்து சேர்ந்து விடுவேன். குறைவாக இருந்தால்தான் நேராகவே உள்ளே நுழைவேன்.

ஸலூனுக்குப் பக்கத்தில் செல்லும்போது கொஞ்சம் தயங்கினாலும் போதும். ஆறுமுகம் சலாம் போட்டு உள்ளே அழைக்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய அழைப்பைத் தட்டிக் கழிப்பது எப்படி?