பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வாழ்க்கை விநோதம்


நான் எவ்வளவுதான் முன்ஜாக்கிரைதயாகப் போனாலும் ஸலூனில் ஐந்து, ஆறு நபர்களுக்குக் குறைவாக இருப்பதே இல்லை. அங்கு உள்ளதே மூன்று ஸ்தானங்கள்தாம். இவற்றில் காலி ஏற்படும் ஸ்தானத்தை முன்னால் வந்தவர்கள்தாம் வரிசைப்படி நிரப்புவது வழக்கம்.

கடைவீதிகளில் உள்ள ஸலூன்களைப் போல ஆறு முகம் புதுப் பத்திரிகைகள் வாங்கிப் போடுவது கிடையாது. எல்லாம் நாலைந்து வருஷங்களுக்கு முன்பு வந்தவைகள்தாம். புதுப் பத்திரிகைகளையாவது, நாம் எங்கேனும் இலவச வாசகசாலைகளில் பார்த்துவிடலாம். ஆனால், பழைய பத்திரிகைகளைப் பார்ப்பது அவ்வளவு சுலபமா? அத்துடன், அந்தப் பழைய பத்திரிகைகளின் வளர்ச்சியையும் தாழ்ச்சியையும், ஏன், மறைவையும்கூட அறிந்துகொள்ளலாமல்லவா?

உள்ளே நுழையும்போது, “உட்காருங்க. இதோ ஐந்தே நிமிஷந்தான்” என்று ஆறுமுகம் சொல்லியிருந்தாலும், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டும், என்னுடைய முறை வருவதற்கு வேலையெல்லாம் கெட்டுவிடுவதோடு ஆபீஸ் மானேஜரின் முன் போய் ‘லேட்’ ஆகச் சென்றதற்கு விளக்கம் கூற வேண்டியதும் வரும்.

வேறு ஸ்லூன்களுக்காவது போய்விடலாம் என்றால் அங்கும் இந்த மாதிரிக் கஷ்டங்கள் இல்லாமலா இருக்கின்றன? அப்படியே வேறு இடங்களில் சென்று ஷவரம் செய்துகொண்டாலும் ஆறுமுகம் கடையைத் தாண்டித்தானே வீடு செல்ல வேண்டும்? அப்பொழுது அவனிடம் தலையைக் காட்டாது இருக்க முடியுமா ? அவன் நம்மேல் வைத்திருக்கும் மரியாதைக்குப் பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது?