பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைக்கு வந்தது

13


ஆறுமுகம் முதலாளியாகையால் ஒரு சிலருக்குத் தாம் அவனே நேராக ஷவரம் செய்வது வழக்கம். அந்த ஒரு சிலருள் நானும் ஒருவன்.

நமக்கு ஷவரம் செய்துகொண்டிருக்கும்போதே வீதியில் போகும் ஒவ்வொருவரையும் சலாம் செய்து உள்ளே அழைப்பதிலும், ஷவரம் செய்துகொண்டவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிப் பெட்டியில் போட்டு, பூட்டிச் சாவியைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டு, அவர்களுக்குச் சலாம் போட்டு வழி அனுப்பு வதிலும், இடையிடையே நேரத்தைப் போக்கிவிடுவான். அத்துடன் பலகாரம், டீ முதலியவற்றை வேறு வாங்கி வரச் செய்து நமது அனுமதி பெற்றுச் சாப்பிட ஆரம்பித்துவிடுவான் !

ஷவரம் செய்யும்போது, குதிரை வண்டிக்காரர்களும், போட்டோக்காரர்களும், ட்ரில் மாஸ்டர்களும் படுத்தும் பாட்டைவிட அதிகப் பாடுபடுத்திவிடுவான்.

“சார், கொஞ்சம் தலையைக் குனிந்துகொள்ளுங்கள். சார், கொஞ்சம் இப்படித் திரும்புங்கோ. கொஞ்சம் மேலே, கொஞ்சம் கீழே” என்று, கழுத்தைத் திருகாமல் மற்றவற்றை எல்லாம் செய்துவிடுவான்.

கத்தியை எடுத்து மூக்குக்குக் கீழே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்ணிர் கலங்கும். அது நல்ல கத்தியாக இருந்தாலல்லவா ? பட்டாவைத் தீட்டியல்லவா நமது தோலைப் பதம் பார்க்கிருன் ?

ஒரு சமயம் இப்படித்தான் ஷவரம் செய்துகொண்டிருந்தான். அடுத்த வீட்டில் ஏதோ அழுகைக் குரல் கேட்டது.

ஆறுமுகம் என்னைப் பார்த்து, “சார், இங்கே அடுத்த வீட்டிலே இறந்து போனாங்களே, அவங்க உங்களுக்குச் சொந்தமா?” என்று கேட்டான்.