பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பிரயாணம்

19


சமாதானம் செய்து பார்த்தோம். அதற்கெல்லாம் மசியாத சில பேர் வழிகள் எங்கள் வண்டியில் ஏறிவிட்டால், “ஏன் சார், எங்கு போகிறீர்கள்?” என்று கேட்போம். பக்கத்து ஊராயிருந்தால் பரம சந்தோஷந்தான். எங்களுடனேயே முழுவதும் வருவதாகவோ, அல்லது அதற்கு மேலேயும் செல்வதாகவோ பதில் வந்தால், “ஏண்டா கேட்டோம்” என்று இருக்கும்.

ஒரு கிழவனார் எங்கள் வண்டியில் வந்து ஏறினார். அவருக்கு நிற்கக்கூட இடமில்லை. ரொம்பக் கஷ்டப் பட்டார். அப்பொழுது என் நண்பன் சோமு, “தாத்தா, நீங்கள் இந்த இடத்தில் உட்காருங்கள்" என்று எழுந்து கொண்டு தான் இருந்த இடத்தைக் காண்பித்தான்.

உடனே அந்தப் பெரியவர், “அடடா, அதெல்லாம் வேண்டாம் தம்பி. நீயே உட்கார்ந்திரு; பாவம் எதற்காக உனக்கு இந்தக் கஷ்டம்” என்றார்.

ஆனால் சோமு, அவரை விடவில்லை. தன் இடத்தில் அவரைப் பிடித்து உட்கார வைத்தான்.

அந்தக் கிழவனாருக்குப் பரம சந்தோஷம். பக்கத்தி லிருந்த ஒருவரிடம், “பார்த்தீர்களா! என்ன கருணை! அதுவும் இந்தக் கஷ்ட காலத்திலே, யாரப்பா இந்த மாதிரி இடம் கொடுக்கிறார்கள்!” என்று புகழ்ந்து கொண்டே சோமுவை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆனால், சோமு ரயிலைவிட்டுக் கீழே இறங்கி, “சரி, இரண்டாவது மணியும் அடிச்சாச்சு. நான் போய் வரட்டுமா?” என்று எங்கள் விடையை எதிர்பார்த்து நின்ற போதுதான், சோமு, எங்களை வழியனுப்ப வந்த பேர்வழி என்பது கிழவனாருக்கு வெட்டவெளிச்சமா யிருக்கும். ஆச்சரியம் இருந்த இடத்தில் ஏமாற்றம் குடி கொண்டிருக்கும்.