பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வாழ்க்கை விநோதம்


September, April, June & November’ என்று நாளைக் கணக்குப் பண்ணிக்கொண்டே இருக்கிறீரே !” என்று எரிந்து விழுந்தார்.

என்ன செய்வது? குற்றம் என்னுடையதுதான். இரண்டு நாட்களாகக் கஷ்டப்பட்டுக் கடைசியில், அந்த விலாசம் எழுதிய சீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். அந்த விலாசத்துக்குக் கடிதமும் எழுதிவிட்டேன்.

நான்கு நாட்களில் கடிதம் திரும்பி வந்துவிட்டது. காரணம், அந்த விலாசத்தில் அந்த ஆசாமி இல்லையாம். மானேஜரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

“அடடா, அவர் வேறு இடத்திற்கு மாறிவிட்டதாகப் பத்து நாட்களுக்கு முன்னால் எழுதியிருந்தாரே! மறந்தே போய்விட்டேன், பார்த்தீரா!” என்று தலையைச் சொறிந்தார்.

“என்ன ஐயா, மானேஜரே, நீர் மட்டும் மாதம் பிறந்தவுடனே, சம்பளம் வாங்க மறந்துவிடுகிறீரா?” என்று கேட்க என் வாய் துடித்தது. ஆனாலும் என்ன செய்வது? வேலை போகாதிருக்க வேண்டுமே !

இப்படி ஏன், என்னுடைய வாழ்க்கையிலிருந்தும் ஒரு பகுதியை இங்கே எடுத்துவிட்டேன் என்றால், அநேக பெரிய மனிதர்கள் வாழ்விலும்கூட, இந்த மறதி தனது லீலையைச் செய்கிறது என்பதைக் காட்டவேதான்!