பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வாழ்க்கை விநோதம்

தில் கொண்டு வருவதாகத்தான் சொல்லுவான். ஆனால் அவனுடைய காலண்டரில் ஒரு வாரம் என்பது 20 நாட்கள் கொண்டதா, 30 நாட்கள் கொண்டதா என்பதை இன்னும் யாராலுமே நிச்சயமாகக் கூற முடியவில்லை.

மூன்று வருஷ காலமாகவே எனக்கும் அவனுக்கும் தொடர்பு உண்டு. ஒரு தடவையாவது, 20 நாட்களுக்குக் குறைந்து, சலவை கொண்டு வந்தது இல்லை. ஆனாலும் நண்பர்களில் யாராவது புதிதாக அவனிடம் சலவைக்குப் போட நினைப்பவர்கள், “ஏனப்பா, எவ்வளவு நாளில் கொண்டு வருவாய்?” என்று கேட்டால், “ஒரு வாரம் ஆகும்” என்று என்னையும் வைத்துக்கொண்டே தைரியமாகப் பதில் சொல்லுவான்.

சலவையோ ரொம்பப் பிரமாதம்! யாரோ ஒரு புலவர், வண்ணான் ஒருவன் வெளுத்து வந்த வெள்ளையைப் பற்றிப் பாடினராம். அதிலே, அந்த வெள்ளையைப் பார்த்தவுடனேயே, விண்ணுலகத்திலுள்ள விஷ்ணு, தன் கையில் உள்ள சங்குதான் பூலோகம் சென்று இப்படி வெள்ளையாகத் தெரிகிறதோ என்று பிரமித்துவிட்டு, சங்கு கையில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டாராம்.

ஆனால், சண்முகத்தினுடைய சலவையைப் பார்த்தால் தன் உடம்பே பூலோகம் புகுந்துவிட்டதோ என்று மிரண்டு, திருமேனியைத் தொட்டுப் பார்க்க ஆரம்பித்துவிடுவார் விஷ்ணு. வேஷ்டிகள் எல்லாம் வெள்ளையாயிருந்தால், சங்கோ என்று நினைத்துச் சந்தேகப்படலாம். ஆனால் இவைகளெல்லாம்தாம் ஒரே நீலமயமாக இருக்கின்றனவே! விஷ்ணு இப்படி மிரளாது என்ன செய்வார்?