பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சலவைத் தொழிலாளி

31


“என்னய்யா, நீலம் கிடைக்காத இந்தக் காலத்தில், எந்த வண்ணானாவது நீலத்தை அதிகம் உபயோகப் படுத்துவானா ? அவனுக்கென்ன பைத்தியமா?” என்றா கேட்கிறீர்கள்.

“ உண்மை. வெறும் இகழ்ச்சியில்லை. உயர்ந்த ரகமான நீலம் வாங்கினாலல்லவா, அவனுக்குக் கஷ்டம்? உபயோகப்படுத்துவதெல்லாம் `கட்டி நீலம்' என்னும் மட்டச் சரக்குத்தானே! அதனால்தான், அது வேட்டி சட்டைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு,போகவே மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறது.

போன தடவை கொண்டுவந்த சலவையில் ஒரு வேட்டி, சில இடங்களில் இரும்புக்கறை படிந்து மிகவும் மோசமாக இருந்தது.

“என்னப்பா, இந்த வேட்டியிலே இது என்ன கறை?” என்றேன்.

“இல்லீங்களே, நான் ஒண்ணும் மாத்திக்கொண்டாரல்லியே. நீங்க போட்ட வேட்டிதானுங்க. போடயிலேயே நாலு பக்கமும் கறையிருந்திச்சுங்களே” என்று என்னையே திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

இதைக் கேட்டு நான் கோபிப்பதா? சிரிப்பதா?

வேட்டிகளில் இந்த மாதிரி இரும்புக்கறை, நீல வர்ணம் இவைகள் இருப்பதோடு, இன்னொரு அழகும் உண்டாக்கிவிடுவான். அதுதான் அவன் விலாசம் போடும் அழகு.

கிராமாந்தரங்களில், ஏதாவது கோடு அல்லது புள்ளி வைத்துக் குறிபோடுவார்கள். ஆனல் இது பட்டணமல்லவா? அம்மாதிரி குறி போடலாமா?

இங்கிலீஷில் விலாசம்போட்டிருப்பான்.ஒரு எழுத்து இரண்டு எழுத்துக்களல்ல. (ஐந்து எழுத்துக்கள்) G.S.A.L.V-இவைதாம் அந்தப் பஞ்சாட்சரங்கள்.