பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வாழ்க்கை விநோதம்


போலச் ‘சள, சள’ என்று பேசிக் கொட்டிக்கொண்டிருந் தான்.

அன்று, ராமர் காட்டுக்குப் போகும் கட்டம். காட்டிற்கு ராமர் வந்துவிட்டார். பரதன் அவரைத் திரும்ப அழைக்கிறான். ராமர் வரமாட்டேன் என்கிறார், பரதன் எவ்வளவோ மன்றாடியும் பயனில்லாததால், சரி அண்ணா, தங்களின் பாதுகைகளையாவது என்னிடம் கொடுங்கள். நான் அவைகளை வைத்துப் பூஜை செய்கிறேன்” என்கிறான். - அந்த இடம் மிகவும் சுவையாக இருந்தது. நாராயணன், என்னிடம், “பாரடா ராமாயண தர்மத்தை! இதனால்தான், புராணக் கதைகளை நான் நம்புகிறதேயில்லை. தாயார் இராமனைக் காட்டுக்கு விரட்டிவிட்டாள். மகனோ (பரதன்) காட்டில் கிடக்கும் முள்ளெல்லாம் காலில் ஏறட்டும் என்று பாதுகைகளையும் பறித்துக் கொண்டுவிட்டான். நன்றாயிருக்கிறது” என்று ஆரம்பித்துவிட்டான்.

நான் அவனிடம், “அப்படி யல்லடா. இதுதான் அன்பின் பெருக்கு, காலில் அணிகின்ற செருப்பைக் கூடத் தலைமேல் வைத்துப் பூசிக்கிற தென்றால், எவ்வளவு அன்பும் பக்தியும் கலந்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டுக் கேலி செய்கிறாயே!” என்று சமாதானப்படுத்த முயன்றேன்.

ஆனால், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. பேச்சு வளர ஆரம்பித்தது. அதற்குள் பக்கத்திலிருந்தவர், “எதுக்காக இப்படிச் சப்தம் போடுகிறீர்கள்? ராமாயணம் கேட்க வந்தீர்களா, பொம்மனாட்டிகள் போலச் சளசள என்று பேசிக்கொண்டிருக்க வந்தீர்களா ? ராமாயணம் கேட்பதாய் இருந்தால் கேளுங்கள்.