பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வாழ்க்கை விநோதம்

ளெல்லாம் வந்து பேசும்படி ஏற்பாடு செய்தோம். அழைப்புக்கள் அச்சடிக்கப்பட்டன. ‘நிகழ்ச்சி முறை’யில் அந்தப் பிரசங்கிகள் பெயரோடு, என் பெயரையும் சேர்த்து அச்சடித்துவிட்டேன்!

ஆனால் இந்த நிகழ்ச்சி முறை, ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது. சங்கத்தின் தலைவர், உபதலைவர், பொக்கிஷதார் எல்லோரும் சேர்ந்து எனது செய்கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பெரியவர்களுடைய பக்கத்திலே, மேடைமீது ஏறிப் பேசியே அறியாத என் பெயரை அச்சடித்ததோடு அல்லாமல், மற்ற உத்தியோகஸ்தர்களின் அனுமதியையும் நான் பெறவில்லை என்பதுதான் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம்.

தலைவர், நிகழ்ச்சி முறையிலிருந்து என் பெயரை அடித்துவிடவேண்டும் என்றாராம். உபதலைவர், 'அப்படி அடித்தால் நன்றாக இராது. அழைப்புக் கெட்டுவிடும். வேறு அச்சடித்தால்தான் தேவலை' என்றாராம். பொக்கிஷதாரோ, வேறு அழைப்பு அச்சடிப்பது கூடாது; பொருளாதார நிலைமை சரியில்லை' என்றாராம். கடைசி யில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். தலைவரிடம் கொடுக்கும் நிகழ்ச்சி முறையில்மட்டும், எனது பெயரை மையால் அடித்துவிடுவது என்பதுதான் அவர்களின் முடிவு.

இது, எனக்கு மிகுந்த வருத்தத்தையும் ஆத்திரத்தையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஒன்றாக உண்டாக்கிவிட்டது. அடுத்த வருஷம் காரியதரிசியாக இருக்கிறோமோ இல்லையோ, இந்த வருஷமே பேசி ஆசை யைத் தீர்த்துக்கொண்டு விடலாம் என்றல்லவா எண்ணி யிருந்தேன். இப்படிக் கெடுத்துவிட்டார்களே, என்ன செய்வது ?