பக்கம்:வாழ்க்கை விநோதம்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரியில்லா வருமானம்


‘இடது கைக்குத் தெரியாமல், வலது கையால் கொடுப்பது தர்மம்’ என்றார் இயேசுநாதர்.

ஆனால், இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் லஞ்சம் வாங்குவதில், இயேசுநாதரையும் மிஞ்சக் கூடியவர்கள் இன்று உலகத்தில் பெருகி வருகின்றனர்.

யுத்தத்தில், எல்லாவற்றிற்கும் பஞ்சம் வந்தது. ஆனால், லஞ்சம் வாங்குவது மட்டும், பஞ்சமில்லாது வளர்ந்து வருகிறது.

லஞ்சம் வாங்கும் சிலர், “நான் அவரிடம் வாங்கியதை, லஞ்சம் என்று எப்படிச் சொல்ல முடியும் ? நான் செய்த உதவிக்காக, அவர் எனக்கு அளித்த சன்மானம் இது” என்று கூறலாம். நேரான வழியில் காரியத்தைச் செய்து, பலபேர் அறியப் பெறுவது சன்மானம். அதற்கு மதிப்பு உண்டு. ஆனால், இரகசியமான வழியில், முறை தவறிக் காரியம் செய்து இரகசியமாகவே பணம் பெறுவதை, எப்படிச் சன்மானம் என்று சொல்ல முடியும்? “ஹோட்டல் மானேஜருக்கு நான் எட்டணாக் கொடுத்தேன். அவர் எனக்கு, இலவசமாகச் சாப்பாடு போட்டார்” என்பது போலத்தான் இது இருக்கிறது.

“உள்ளே அதிகாரியைப் பார்க்கவேண்டுமா? அப்படியானால் என் கையில் எட்டணாவை வை. சமயம் பார்த்து உள்ளே தள்ளி விடுகிறேன்' என்கிறான் டபேதார்.